தோல்வியில் உருவான வெற்றி.. NIKE பிராண்ட் உருவாக வியக்க வைக்கும் கதை..!!
நைக் உலகப் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் காலணிகள் மற்றும் விளையாட்டு உடைகளுக்கான நிறுவனம். விளம்பரங்கள், புதுமை மற்றும் காலத்துக்கு ஏற்ப மாற்றுவது ஆகியவை ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியம் என்பதற்கு உதாரணம் நைக்.
தடகள வீரர் மற்றும் விளையாட்டு நிருபர் , கல்லூரி விரிவுரையாளர் என பல முகம் கொண்ட பில் நைட் மற்றும் அவரது பயிற்சியாளர் பில் பவர்மெனால் தொடங்கப்பட்ட நிறுவனம். தனது ஓட்டப்பந்தய ஆர்வத்தையும் புதிதாக கற்றுக் கொண்ட வணிக திறன்களை இணைத்து, பயிற்சியாளர் பில் பவர்மெனின் உதவியுடன் ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ் என்ற தனது காலணி நிறுவனத்தை 1964இல் தொடங்கினார் பில் நைட்.
ஜப்பானிலிருந்து அமெரிக்க சந்தையில் உயர்தர மற்றும் குறைந்த விலை ஓட்டப்பந்தய காலணிகளை இறக்குமதி செய்வதே அவரது நோக்கமாக இருந்தது. இதற்காக ஜப்பான் நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்தார்.
1971இல் நைக் என பெயர் மாற்றம்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1971ஆம் ஆண்டு 50 ஊழியர்களை கொண்டு இயங்கும் நிறுவனமாக இது மாறியது. ஜப்பானிய காலனி சப்ளையர்கள் உடனான உடன்பாடு முடிவடைந்ததை அடுத்து, பில் நைட், மெக்சிகோவில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையை தொடங்கினார்.
அப்போது தான் ஊழியர் ஒருவரால் வழங்கப்பட்ட பெயர் தான் நைக். கிரேக்க மொழியில் இறக்கைகள் கொண்ட வெற்றி தெய்வத்தின் பெயர் தான் நைக். எனவே ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நைக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஜஸ்ட் டூ இட் என்ற டேக் லைன்: நைக் காலணி அமெரிக்காவில் பிரபலமடைந்தது. குறிப்பாக விளையாட்டு வீரர்கள் இவற்றை வாங்க தொடங்கினர். அப்போது விளம்பரம் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பில் நைட் , ஒரு விளம்பர நிறுவனத்திடம் சென்றார்.அப்போது லோகோ மட்டுமல்லாமல் ,அதற்கு ஒரு டேக் லைன் வேண்டும் என விளம்பர நிறுவனம் கூறியது. எனவே பல கட்ட ஆலோசனைக்கு பின் ஜஸ்ட் டூ இட் என்பதை டேக் லைனாக தேர்வு செய்தனர்.
இதனை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு விளம்பரமும் வித்தியாசமாக படைக்கப்பட்டது. இதன் விளைவு நைக் நிறுவனம் உலகளவில் பிரபலமானது. இது நிறுவனத்துக்கு நல்ல லாபத்தையும் பெற்று தந்தது. பின்னர் தடகள வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களுக்கான பிரத்யேக ஷூக்களை தயாரித்து பிராண்ட் அம்பாசிடர்களாக தேர்வு செய்தனர். இது நைக் மேலும் பிரபலமடைய உதவியது.
காலணிகள் மட்டுமில்லாமல் ,விளையாட்டுக்கு தேவையான ஆடைகளையும் இந்நிறுவனம் விற்பனை செய்கிறது. தற்போது நிறுவனத்தின் மதிப்பு 160 பில்லியன் டாலர்கள் ஆகும்.
தரம், கவர்ச்சிகரமான டேக்லைன், விளம்பர யுக்தி , நவீனத்துவம் ஆகியவற்றின் மூலம் நைக் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெறுவதை விட அந்த வெற்றியை தக்க வைத்து கொள்வது தான் திறமை. அதில் நைக் என்றுமே ராஜா தான்.