உத்தரப்பிரதேசத்தில் வெற்றிகரமாக முடிந்த INDIA கூட்டணி தொகுதி பங்கீடு… யாருக்கு எத்தனை தொகுதி?

உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கிறது. அங்கு சமாஜ்வாதி கட்சி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தொகுதி கண்டறிதல் என அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் நாட்டிலேயே, அதிக தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நீண்ட இழுபறிக்குப் பின்னர், சமாஜ்வாதி கட்சியுடனான தனது தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக இறுதி செய்துள்ளது.தொகுதிப் பங்கீட்டின்படி, மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரேபரேலி, அமேதி, காசியாபாத், கான்பூர் சிட்டி. ஃபதேபூர் சிக்ரி, பாஸ்கான் உள்ளிட்ட 17 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இருமுறை போட்டியிட்டு வென்ற வாரணாசியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்-சமாஜ்வாதி இடையேயான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், கூட்டணி உடைந்து விடும் என கருதப்பட்டது. தற்போது தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. இதன் பின்னணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருப்பதும், அவர், அகிலேஷ் யாதவுடன் நடத்திய பேச்சுவார்தையே சுமுக முடிவு எட்டப்பட காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் காங்கிரசுடனான தொகுதிப் பங்கீடு ஓரிரு நாட்களில் இறுதியாகும் என முதலமைச்சர் அரவிந்த் ஜெஜ்ரிவால் கூறியுள்ளார். தொகுதி பங்கீடு ஏற்கெனவே நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்றும், தொடர்ந்து தாமதம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் தனித்தனியாக தேர்தல் களம் காணும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் டெல்லியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *