இவ்ளோ ஏமாளியா.. சாப்ட்வேர் கம்பெனி சிஇஓவை இப்படி ஈஸியாக ஏமாற்ற முடியுமா.. இந்த சம்பவத்தை பாருங்களேன்
அண்மையில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான 66 வயதான நபர் கூரியர் மோசடியில் சிக்கி 2.3 கோடி ரூபாயை இழந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த அஜித் என்பவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. அவருக்கு 66 வயதாகிறது. அண்மையில் அவருக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் அவரது பெயரில் ஒரு பார்சல் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் போதைப்பொருள் பாஸ்போர்ட் மற்றும் ஆடை போன்ற சட்டவிரோத பொருட்கள் இருந்தன என்றும் கூறியுள்ளனர். அவர் பண மோசடியிலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அச்சப்படுத்தி அவரிடம் இருந்து 2.3 கோடியை ரூபாயை பெற்றுள்ளனர்.
பெங்களூரு சிவி ராமன் நகரில் வசிக்கும் அஜித், அடையாளம் தெரியாத நபர்கள் மீது பிப்ரவரி 16ஆம் தேதி கிழக்கு சிஇஎன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிப்ரவரி 6ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியவர் மும்பையில் உள்ள ஃபெடக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.
தலைமை நிர்வாக அதிகாரி அஜித்தின் பெயர், ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவலை பகிர்ந்த அந்த நபர், உங்கள் பெயரில் ஒரு பார்சல் உள்ளது, அதில் 150 கிராம் போதை மருந்து, நான்கு கிலோ ஆடைகள் மற்றும் நான்கு பாஸ்போர்ட்கள் இருப்பதாக கூறியுள்ளார். இவை சட்டவிரோதமாக ஷாங்காய் நகருக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜித் தான் அவ்வாறு எந்த செயலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அஜித்தை மேலும் அச்சமூட்டுவதற்காக மும்பையின் அந்தேரி போதைப் பொருள் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே திடீரென அந்த அழைப்பு அந்தேரி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவின் டிசிபி பாலாஜி சிங் என கூறப்பட்ட நபருக்கு மாற்றப்பட்டுள்ளது. உடனடியாக அஜித் மும்பைக்கு வர வேண்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனில் கைது செய்யப்படுவீர் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஜீத் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார்.
இருப்பினும் அவர்கள் ஸ்கைப்பில் அழைத்து காவல்நிலையம் போன்ற செட்டப்பில் அமர்ந்து பேசியுள்ளனர். இதனை அஜித் நம்பிவிடவே, தான் எந்தவித சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என நிரூபிக்க தயார் என கூறியுள்ளார்.
இதற்கு அந்த காவல்துறை அதிகாரியாக நடித்தவர், அவரது ஆதாரை பயன்படுத்தி தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் பண மோசடி நடைபெறுவதாக மற்றொரு அதிர்ச்சியை கூறியுள்ளார். இது உண்மையில்லை எனில் தாங்கள் கூறும் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்து நிரூபிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். இதை நம்பி அஜித் 2.3 கோடி ரூபாயை அனுப்பியுள்ளார்.
இதனை அடுத்து போன் வருவது நின்றுவிட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அண்மை காலமாக இது போன்ற கூரியர் பெயரில் புது வகையான மோசடி நடைபெறுகிறது. இதில் குற்றவாளிகள் தனிநபர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் அல்லது சட்ட ரீதியான விளைவுகளை எதிர்கொள்வீர்கள் என்று நம்ப வைப்பதன் மூலம் அவர்களின் பணத்தை பெறுகின்றனர்.
உளவியல் ரீதியான அச்சப்படுத்தி அந்த சூழலை பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.