கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை.. இலங்கை வீரர் செயலால் வாயடைத்துப் போன ஐசிசி
இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ஐசிசி) தனக்கு விதித்த தடையை தகர்த்து எறிந்த விதத்தை பார்த்து கிரிக்கெட் உலகமே வாயடைத்துப் போயுள்ளது.
இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா கடந்த சில வாரங்கள் முன்பு நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது அம்பயரை தவறாக பேசியதால் அவருக்கு ஐந்து தடைப் புள்ளிகள் அளிக்கப்பட்டது. அதனால் அவர் அடுத்து நடந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்ற வனிந்து ஹசரங்கா மீண்டும் அம்பயரிடம் கோபமாக நடந்து கொண்டார். இதை அடுத்து அவருக்கு மூன்று தடைப் புள்ளிகள் அளிக்கப்பட்டன. 24 மாத காலத்தில் எட்டு தடைப் புள்ளிகள் பெற்ற நிலையில் விதிப்படி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அல்லது நான்கு ஒருநாள் போட்டிகள் அல்லது நான்கு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.
வனிந்து ஹசரங்கா ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்த நிலையில் அவர் அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இருந்தார். அதில் இலங்கை அணியின் முதல் நான்கு போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென தனது டெஸ்ட் ஓய்வை திரும்பப் பெற்றார் வனிந்து ஹசரங்கா.
இலங்கை கிரிக்கெட் அமைப்பு அவரை வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்த்தது. இதை அடுத்து விதிப்படி இந்த தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட வனிந்து ஹசரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம், இனி 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் வனிந்து ஹசரங்கா எந்த தடையும் இன்றி அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கலாம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
வனிந்து ஹசரங்கா இந்த தடை முடிந்த உடன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார். மிக சாமர்த்தியமாக சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் விதிகளில் இருந்த ஓட்டைகளை பயன்படுத்தி ஓய்வு பெற்று விட்ட டெஸ்ட் போட்டிகளை கணக்கு காட்டி தடையை தகர்த்து எறிந்து இருக்கிறார் வனிந்து ஹசரங்கா. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இது சரியா? தவறா? என்ற விவாதம் நடந்து வருகிறது.