ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. மத்திய அரசுக்கு புதிய சவால்….
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபரில் வெளியிட்ட தனது நிதிக்கொள்கை குழு அறிக்கையில், எதிர்வரும் 2024-25ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டு இருந்தது.
ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி ஜிடிபி வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை அதிரடியாக குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார நிலை அறிக்கையின்படி, 2024-25ம் நிதியாண்டில் உண்மையான அல்லது நிலையான அடிப்படையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி ஏற்படும். நடப்பு 2023-24ம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இருப்பினும் 2024-25ம் நிதியாண்டில் சில்லரை விலை பணவீக்கம் 4.8 சதவீதமாக குறையும். கடந்த டிசம்பர் 1ம் தேதி வரை, வங்கிகளின் மொத்த டெபாசிட் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 9.3 சதவீதமாக இருந்தது. ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து டெபாசிட் வளர்ச்சி (எச்டிஎஃப்சி இணைப்பின் தாக்கம் நீங்கலாக) அதிகரித்தது. இருப்பினும் அதன் பிறகு டெபாசிட் வளர்ச்சி குறைந்து தற்போது சீராகியுள்ளது.
அதேசமயம் டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி, கடன் வளர்ச்சி (எச்டிஎஃப்சி இணைப்பின் தாக்கம் தவிர்த்து) 16.4 சதவீதமாக சிறிது குறைந்துள்ளது. இது ஓர் ஆண்டுக்கு முன்பு 17.5 சதவீதமாக இருந்தது. 2022 மே முதல் 2023 அக்டோபர் வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு ரெப்போ ரேட்டை 2.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதே காலத்தில் புதிய ரூபாய் கடன்களுக்கான சராசரி கடன் வட்டி விகிதம் 1.99 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஏப்ரல் முதல் உயர்த்தப்பட்ட 0.18 சதவீதமும் அடங்கும். 2023 அக்டோபர் வரையிலான கடந்த 18 மாத காலத்தில் நிலுவையில் உள்ள ரூபாய் கடன்களுக்கான சராசரி கடன் வட்டி விகிதம் 1.12 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம் டெபாசிட் பிரிவில், புதிய மற்றும் நிலுவையில் உள்ள டெபாசிட் மீதான சராசரி உள்நாட்டு டெபாசிட் வட்டி விகிதம் (WADTDR) முறையே 2.28 சதவீதம் மற்றும் 1.72 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
சமீப மாதங்களாக புதிய டெபாசிட்களுக்கான சராசரி உள்நாட்டு டெபாசிட் வட்டி விகிதம் குறைந்துள்ளது இருப்பினும் குறித்த கால டெபாசிட்களின் மறுவிலை நிர்ணயம் மூலம் நிலுவையில உள்ள குறித்த கால டெபாசிட்களின் விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
புதிய ரூபாய் கடன்களுக்கான சராசரி கடன் வட்டி விகிதம் (WALR) மற்றும் புதிய டெபாசிட் மீதான சராசரி உள்நாட்டு டெபாசிட் வட்டி விகிதம் (WADTDR) மீது மாற்றத்தின் பலன் வழங்கப்படுவது தனியார் வங்கிகளை காட்டிலும் பொதுத்துறை வங்கிகளில் அதிகமாக உள்ளது. அதே வேளையில், நிலுவையில் உள்ள கடன்களில் WALRக்கு பரிமாற்றம் தனியார் வங்கிகளில் அதிகமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.