திடீர் மாரடைப்பு… சுருண்டு விழுந்து சி.ஆர்.பி.எப் வீரர் மரணம்!
சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக பணியாற்றி வந்தவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ராஜட் கட்டோச் (29). உடற்பயிற்சி ஆலோசகருமான ராஜட் கட்டோச்சுக்கும் சீமாதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.
தற்போது இவர் தனது குடும்பத்துடன் சிஆர்பிஎஃப் வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ராஜட் கட்டோச் உடலை கைப்பற்றிய ஆவடி டாங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.