விப்ரோ உயர் அதிகாரிகளுக்கு திடீர் ப்ரோமோஷன்.. ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!!

இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, ஆறு மூத்த ஊழியர்களை மூத்த துணை தலைமை அதிகாரி (Senior Vice President – SVP) பதவிக்கும், 25 பேரை துணை தலைமை அதிகாரி (Vice President – VP) பதவிக்கும் உயர்த்தியுள்ளது.

விப்ரோ நிறுவனத்தில் நடந்துள்ள இப்பதவி உயர்வுகள் மூத்த நிலை அதிகாரிகளின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கை என தொழில் துறை கவனிப்பார்கள் கருதுகின்றனர்.

இதேபோல் கடந்த சில மாதங்களில், நிதித் தலைமை அதிகாரி ஜதின் தலால், தலைமை வளர்ச்சி அதிகாரி ஸ்டெபானி டிராட்மன், டிஜிட்டல் மற்றும் கிளவுட் தலைவர் பாரத் நாராயணன் உள்ளிட்ட பல முக்கிய மூத்த அதிகாரிகள் விப்ரோ நிறுவனத்தை விட்டு வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை மேலும் தொடரும் என அச்சம் நிலவும் காரணத்தால் விப்ரோ நிறுவனத்தில் 30க்கும் அதிகமான மூத்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுத்துள்ளது. மேலும் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களிலும் மூத்த அதிகாரிகளை ஈர்க்கும் போட்டி தொடர்ந்து இருக்கிறது.

இந்திய ஐடி மற்றும் கன்சல்டிங் நிறுவனங்களில் துணை தலைமை (AVP), துணை தலைமை (VP) மற்றும் மூத்த துணை தலைமை (SVP) பதவி வகிப்பவர்களின் பணி மாற்ற விகிதம் 2024 நிதியாண்டில் 11 சதவீதமாக இருந்தது, இது கடந்த நிதியாண்டை விட 4 சதவீதம் குறைவு என Xpheno நிறுவனத்தின் தரவுகள் கூறுகிறது.

விப்ரோ நிறுவனம் வெள்ளிக்கிழமை இந்த பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது “வலுவான உள்நாட்டு தலைவர்களை உருவாக்குவதற்கான எங்கள் தொடர் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி” என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளையில் தலைமை செயல் அதிகாரி தியர்ரி டெலபோர்ட்டின் தலைமையில் இயங்கும் விப்ரோ நிறுவனம், இந்தியாவின் முன்னணி 4வது பெரிய ஐடி நிறுவனங்களில் இந்த நிதியாண்டில் வருவாய் குறைவுடன் முடிவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பதவி உயர்வு சுழற்சியில் (ஜனவரி 2023), 12 பேரை மூத்த துணை தலைமை அதிகாரியாகவும், 61 பேரை துணை தலைமை அதிகாரியாகவும் என மொத்தம் 73 பேரை பதவி உயர்வு செய்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது 31 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கியுள்ளது, பதவி உயர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தால் கூடுதலாக உயர் அதிகாரிகள் வெளியேற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி உயர்வு பெற்றவர்களில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல்படுத்தல் அதிகாரி அஜித் மஹாலே, ஹெல்த்கேர் துறை தலைவர் அனுஜ் குமார், கேப்கோ நிதித் தலைமை அதிகாரி பெஞ்சமின் சைமன், கனடா நாட்டு தலைவர் கிம் வாட்சன், ஐரோப்பிய கிளவுட் விற்பனை தலைவர் ஸ்ரீனிவாசா ஹெச்.ஜி., மற்றும் கிளவுட் பிரிவின் தலைவர் சதீஷ் ஆகியோருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *