பைக் பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்… கவாஸாகியின் புதிய எலிமினேட்டர் 500 பைக் இந்தியாவில் அறிமுகம்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான கவாஸாகி, இந்தியாவில் புதிதாக க்ரூஸர் மாடல் எலிமினேட்டர் (Eliminator) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.5.62 லட்சம் ஆகும். மெட்டாலிக் ஃப்ளாட் ஸ்பார்க் பிளாக் என்ற ஒரேவொரு நிறத்தில் மட்டுமே இந்த எலிமினேட்டர் பைக் தற்போது கிடைக்கிறது.

நிஞ்சா ZX-6R பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய அடுத்த நாளே எலிமினேட்டர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது கவாஸாகி. புதிய கவாஸாகி எலிமினேட்டர் 500 பைக்கின் விலை அதிகமாக இருந்தாலும், மிட்வெயிட் க்ரூஸர் பிரிவில் உள்ள ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீடியார் (Meteor) 650-க்கு இது சிறந்த போட்டியாளராக இருக்கும்.

கவாஸாகி எலிமினேட்டர் 500 பைக்கில் புதிய 451சிசி, ஃபுயூல் இஞ்செக்டட், லிக்கியூட் கூல்ட் பேரலல் ட்வின் இஞ்சின் உள்ளது. நிஞ்சா 400 பைக்கிலும் இதே இஞ்சின் தான் பொறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் 6.3மிமீ நீளமான ஸ்ட்ரோக் உள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வரும் இந்த பைக், அதிகப்பட்சமாக 9,000rpm –ல் 44.79bhp பவரையும் 6,000rpm-ல் 42.6Nm இழுவிசையும் கொண்டுள்ளது.

இந்தப் பைக்கில் முன்பக்க வீல் 18 இன்ச் அளவிலும் பின்பக்க வீல் 16 இன்ச் அளவிலும் உள்ளது. இதற்கேற்ற டயர்கள் முறையே 130/70 மற்றும் 150/80 என்ற பிரிவுகளில் வருகிறது. பிரேக்கைப் பொறுத்தவரை முன்பக்கம் 320mm டிஸ்க் மற்றும் பின்புறம் 240mm டிஸ்க் பொறுத்தப்பட்டுள்ளது.

புதிய 2024 கவாஸாகி எலிமினேட்டர் 2,250mm நீளமும், 785mm அகலமும், 1,100mm உயரமும் உள்ளது. இந்தப் பைக்கின் வீல்பேஸ் 1,520mm நீளமும் ஒட்டுமொத்தமாக 176 கிலோ எடையும் உள்ளது. இதன் சீட் உயரம் வழக்கத்தை விட குறைவாக 735mm மட்டுமே உள்ளது.

கவாஸாகி எலிமினேட்டர் பைக்கின் தோற்றத்தைப் பொறுத்தவரை, ஒரிஜினல் எலிமினேட்டர் க்ரூஸர் மாடலின் நவீன வடிவமாக இருக்கிறது. மெல்லிய எரிபொருள் டேங்க், ட்ரெல்லிஸ் ஃப்ரேம் சேசிஸ் போன்றவை இந்த பைக்கிற்கு அழகான தோற்றத்தை தருகிறது. சாலையில் செல்லும் போது இதன் எக்சாஸ்ட் சவுண்ட் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

இந்தப் பைக்கில் முழுமையாக LED லைட்டிங் வசதி உள்ளது. மேலும் வட்ட வடிவிலான LCD திரையின் மூலம் கவாஸாகியின் Rideology செயலியோடு உங்களின் போனை இணைக்கலாம். இதுதவிர ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் வசதியும் டூயல் சேனல் ABS வசதியும் இந்த எலிமினேட்டர் பைக்கில் உள்ளது.

ரெட்ரோ க்ரூஸர் பைக்கிற்கு ஒரு நவீன தோற்றத்தை தருகிறது இந்த கவாஸாகி எலிமினேட்டர். நிறைய தொழில்நுட்ப வசதிகளையும் நல்ல பவரையும் கொண்டுள்ள இந்த பைக்கை ரூ.5.62 லட்சம் கொடுத்து தாராளமாக வாங்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *