ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் சந்தேக நபர் கைது..!

பெங்களூருவில் ஒயிட் ஃபீல்ட் அருகில் செயல்பட்டுவந்த ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரப‌ல உணவகத்தில் மார்ச் 1-ம் தேதி சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதில் காயமடைந்த 10 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பெங்களூரு போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைத்திருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு மார்ச் 3 தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (ஐஎன்ஏ) மாற்றப்பட்டது.

இந்தநிலையில் மார்ச் 1-ம் தேதி பெங்களூரு மாநகரப் பேருந்து மற்றும் தும்கூருவுக்கு அரசுப் பேருந்தில் குற்றவாளி பயணம் செய்த சிசிடிவி வீடியோ கிடைத்தது. அதில் அவர் தொப்பி, முகக் கவசம் அணியாமல் மிகச்சாதாரணமாக இருப்பது தெரிகிறது.இதேபோல அவர் மார்ச் 5-ம் தேதி இரவு பெல்லாரி பேருந்து நிலையம் அருகே நடந்து செல்வது போன்ற வீடியோவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இந்த 3 வீடியோக்களிலும் குற்றவாளி அடிக்கடி சட்டை, பேண்ட் ஆகியவற்றை மாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை கண்டுபிடிக்க புலனாய்வு முகமை பொதுமக்களின் உதவியை நாடியது. சந்தேகிக்கப்படும் குற்றவாளி உணவகத்தில் இருக்கும் வீடியோ ஆதாரம் கிடைத்த நிலையில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தது. உணவகம் மீண்டும் திறப்பு: இதற்கிடையில், பெங்களூருவில் குண்டு வெடித்த ராமேஸ்வரம் கஃபே உணவகம் 8 நாட்களுக்கு பின்னர் மார்ச் 9ம் தேதி மீண்டும் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் திருப்புமுனையாக வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர்.

ஷபீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் பெல்லாரியில் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். ராமஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக கேமராவில் பதிவான நபரின் நெருங்கிய கூட்டாளி ஷபீர் என்று நம்பப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *