விசாரணை கைதிகளின் பல்லைப் பிடுங்கிய பல்வீர் சிங்கின் பணி இடைநீக்கம் ரத்து!
மக்களை காவலில் வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட காவல்துறை அதிகாரி, தமிழக அரசால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமாகத் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் முன்னாள் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதான பணி இடைநீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2020 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர் சிங், ராஜஸ்தானில் உள்ள டோங்கை சேர்ந்தவர்.
பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ஆறு மாத காலத்தை தாண்டிவிட்டதால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநில உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டுகிறார். “காலவரையற்ற இடைநீக்கம் அவரது வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும்” என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பல்வீர் சிங் மீதான வழக்குகளில் விசாரணை நடைபெறுவதாகவும் அந்த அதிகாரி தெரிவிக்கிறார். “இப்போது காவல்துறை விசாரணை முடிந்து, வழக்கு நீதித்துறை விசாரணையில் இருப்பதால், அவரது இடைநீக்கத்தை ரத்து செய்வது வழக்கைப் பாதிக்காது” எனவும் அந்த அதிகாரி சொல்கிறார்.
விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசாரணைக் கைதிகளிடம் கூரிய ஜெல்லி கற்களைப் பயன்படுத்தி அவர்களின் பற்களைப் பிடுங்கினார் என்று பல்வீர் சிங் மீது குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், அவர்களின் ஆணுறுப்புகளை நசுக்கி ஈவிரக்கமில்லாமல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்ட பிறகு, பல்வீர் சிங் சட்டம் ஒழுங்கு தொடர்பான பணிகளுக்கு அனுப்பப்படமாட்டார் என்று கூறப்படுகிறது. அவரை மீண்டும் தேசிய போலீஸ் அகாடமியில் ஒப்படைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமலே பல்வீர் சிங் மீது விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் அவரைக் காப்பாற்ற முயன்றதாக தமிழ்நாடு அரசு காவல்துறை டிஜிபியும் விமர்சனங்களை எதிர்கொண்டனர். இறுதியில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருக்கு உதவிய அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.