பைக் விற்பனையில் 13% வளர்ச்சி கண்ட சுசூகி மோட்டார்ஸ்!
2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 95,762 பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது சுசூகி மோட்டார்ஸ் நிறுவனம். கடந்த வருடத்தை விட இது 13 சதவிகிதம் வளர்ச்சியாகும். இந்த எண்ணிக்கையில் 80,511 பைக்குகள் உள்நாட்டிலும் 15,251 பைக்குகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. மேலும் தங்களது சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவாக்கும் பொறுட்டு கிருஷ்ணா நகரில் புதிய டீலர்ஷிப்பை தொடங்கியுள்ளது சுசூகி நிறுவனம்.
சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விற்பனை தலைவர் தேவசிஷ் ஹண்டா கூறுகையில், சுசூகி மோட்டார்ஸின் வளர்ச்சி பாதை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சிறப்பான சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு நாங்கள் கொடுத்த முகியத்துவமே இந்த வெற்றிக்கு காரணம். இதற்காக எங்களது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்கள், மதிப்பு வாய்ந்த பிசினஸ் பார்ட்னர்கள் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க குழு உறுப்பினர்களுக்கும் அவர்களது தொடர்ச்சியான ஆதரவிற்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் தங்களது புதிய V-ஸ்டார்ம் 800 DE பைக்கை காட்சிப்படுத்தியது சுசூகி நிறுவனம். சாகச விரும்பிகளுக்கான அட்வென்ச்சர் டூர் மாடலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் சோதனை ஓட்டம் ஏற்கனவே பலமுறை இந்திய சாலையில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகையால் கூடிய விரைவில் இந்த பைக் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய V-ஸ்டார்ம் 800 DE பைக்கில் 776 சிசி திறன் கொண்ட பேரலல் ட்வின் இஞ்சின் உள்ளது. இது லிக்கியூட் கூல் இஞ்சினாகும். இந்தப் பைக்கின் மற்ற சிறப்பம்சங்களை பார்த்தோமென்றால், அதிகபட்சமாக 8,500 rpm-ல் 83 bhp பவரையும் 78 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. மேலும் மேடு பள்ளமான சாலைகளில் எளிதாக ரைட் செல்வதற்கு வசதியாக குயிக் ஷிஃப்டருடன் கூடிய 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்தப் பைக்கின் மைலேஜைப் பொறுத்தவரை, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சராசரியாக 22.7 கி.மீ தருவதாக சுசூகி நிறுவனம் கூறுகிறது.
இதற்கிடையில் புதிய GSX-8R பைக்கை கடந்த வருடம் நடைபெற்ற EICMA நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்தது சுசூகி நிறுவனம். GSX-8S வடிவமைப்பில் இந்த ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் முழுமையான ஃபேரிங், கொஞ்சம் வித்தியாசமான வடிவமைப்பு, Revised Riding Triangle போன்றவை இந்தப் பைக்கில் கூடுதலாக உள்ளது. இதன் காரணமாக GSX-8S பைக்கை விட GSX-8R பைக்கின் எடை 8 கிலோ அதிகமாக இருக்கிறது. V-ஸ்டார்ம் 800 DE பைக்கில் உள்ள அதே இஞ்சின் தான் GSX-8R பைக்கிலும் பொறுத்தப்பட்டுள்ளது.