சுவிட்சர்லாந்து வாட்ச் தயாரிப்பில் இந்திய நிறுவனம்.. பங்கு விலையை விடுங்க டிவிடெண்ட்-ஐ பாருங்க..!
கேடிடிஎல் நிறுவனம் இஜென் (Eigen) என்ற பிராண்ட் பெயரில் டயல்கள் மற்றும் முள்கள் (ஹேண்ட்ஸ்) போன்ற மிகவும் நுட்பமான கை கடிகார பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல வாட்ச் உற்பத்தியாளர்களுக்கு உயர்தர டயல்கள் மற்றும் ஹேண்ட்ஸ் சப்ளை செய்யும் முக்கிய சப்ளையராக இந்நிறுவனம் உள்ளது.இந்நிறுவனம் தனது துணை நிறுவனங்களான பைலானியா எஸ்ஏ மற்றும் எஸ்டிமா ஏஜி ஆகியவற்றின் மூலம் சுவிட்சர்லாந்தில் வர்த்தகம் செய்து வருகிறது. பைலானியா எஸ்ஏ நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம், எஸ்டிமா ஏஜி நிறுவனம் சுவிஸ் நிறுவனங்களுக்கு டயல்கள் மற்றும் ஹேண்ட்ஸ் தயாரித்து வழங்குகிறது.
இதுதவிர, கேடிடிஎல் நிறுவனம் 2003ல் இதோஸ் என்ற துணை நிறுவனத்தை தொடங்கியது. இந்த துணை நிறுவனம் இந்தியாவில் ஆடம்பர கைக்கடிகாரங்களின் சில்லறை விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.கேடிடிஎல் நிறுவனம் தொடர்ந்து வலுவான நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் கடந்த ஆண்டில் சுமார் 167 சதவீதம் உயர்ந்து ஒரு மல்டிபேக்கர் பங்காக வெளிப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று (ஜனவரி 18) இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.58 (580 சதவீதம்) இடைக்கால டிவிடெண்டாக வழங்குவதாக அறிவித்தது.இது இந்நிறுவனத்தின் அதிகபட்ச டிவிடெண்ட் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த அறிவிப்பு நிறுவனத்தின் வலுவான நிதி செயல்திறனை அடிக்கோடிட்டுக்கு காட்டுகிறது. பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் முகுல் அகர்வாலின் மனைவியான ஆஷா அகர்வால், கேடிடிஎல் நிறுவனத்தின் 4,34,180 லட்சம் பங்குகளை வைத்துள்ளார்.மேலும், பாரத் சி ஜெயின் நிறுவனத்தின் வசம் 2,30,000 பங்குகள் உள்ளது. அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்து இருப்பது, கேடிடிஎல்-ன் வளர்ச்சிப் பாதை மற்றும் சாத்தியக்கூறுகளில் சந்தை நம்பிக்கை வெளிப்படுத்துகிறது.கேடிடிஎல் நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.304.81 கோடியும், நிகர லாபமாக ரூ.69.23 கோடியும் ஈட்டியுள்ளது.