ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20: புதிய உலக சாதனை படைக்கப்போகும் கேப்டன் ரோஹித் ஷர்மா!
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதே சமயம், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்பதால், ஆப்கானும் தனது முழு திறமையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி அணிக்கு திரும்பி உள்ளதால் திலக் வர்மா தனது இடத்தை இழக்கக்கூடும். முதல் ஆட்டத்தில் ஆல் ரவுண்டராக சிறப்பான திறனை வெளிப்படுத்திய ஷிவம் துபேவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்று நடைபெறும் போட்டி மூலம் கேப்டன் ரோகித் ஷர்மா புதிய உலக சாதனை ஒன்றை படைக்க உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா இன்று பெற உள்ளார். இதற்கு அவர், 1 ரன் கூட அடிக்க தேவையில்லை.
ரோஹித் சர்மா இதுவரை 149 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதுவரை எந்த வீரரும் ரோஹித் சர்மா அளவுக்கு அதிகமான போட்டிகளில் விளையாடியது கிடையாது. அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 134 போட்டிகளில் பங்கேற்று 2 ஆவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியை பொருத்தளவில் ரோஹித்திற்கு அடுத்த இடத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 115 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2 ஆவது இடத்தில் உள்ளார். 14 மாதங்களுக்கு பின்னர் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.