T20 WC 2024: முடிவை சொன்ன ரோகித் சர்மா, விராட் கோலி.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு.. திணறும் பிசிசிஐ
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தேர்வு குழுவினரிடம் ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்ததோடு, கேப் டவுன் மைதானத்தில் முதல்முறையாக வெற்றிபெற்று புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை சமன் செய்த இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்று வென்று அசத்தியது. தற்போது டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளதன் மூலமாக இந்திய் அணி மிகச்சிறப்பாகவே செயல்பட்டுள்ளதாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக ரசிகர்களின் கவனம் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர் பக்கம் திரும்பியுள்ளது.
ஏனென்றால் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்திய அணி விளையாடும் ஒரே டி20 தொடராக இது மட்டுமே அமைந்துள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களை முன்கூட்டியே ஒருமுறை இணைந்து விளையாட வைக்க பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
இந்த நிலையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொண்டார். இதற்கு டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர் பயணம் செய்ததாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே டி20 உலகக்கோப்பையில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.