டி20 உலகக்கோப்பை.. குரூப் ஆஃப் டெத்.. தென்னாப்பிரிக்காவை கோர்த்துவிட்ட ஐசிசி.. இந்தியா எந்த குரூப்?
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி மற்றும் குரூப் டி உள்ளிட்ட 4 பிரிவுகளிலும் எந்தந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்ற விவரங்கள் வெளி வந்துள்ளது.
நடப்பாண்டில் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
அதன்பின் சூப்பர் 8 சுற்று போட்டிகளும் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். அதன்பின் இறுதிப்போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடர், ஜூன் 30ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 20 அணிகளும் எந்தந்த குரூப்-களில் பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேபோல் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் உள்ளிட்ட 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூகினியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. கடைசி குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள உச்ச அணிகள் எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் குரூப் சி-யில் 3 நட்சத்திர அணிகள் இடம்பிடித்துள்ளதால், எந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல் குரூப் டி பிரிவில் 5 அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளது. ஏனென்றால் கடந்த டி20 உலகக்கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தியுள்ளது. அதேபோல் வங்கதேச அணியும் எந்த நேரத்திலும் எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இருப்பதால், குரூப் டி தான் குரூப் ஆஃப் டெத் என்று பார்க்கப்படுகிறது.