டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கான கேப்டன், துணை கேப்டன் அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா நாடுகளில் இந்தாண்டு ஜூன் மாதம் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாதான் என ஜெய் ஷா கூறியுள்ளார்.
20 அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1 ஆம்தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை 20 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.
இந்த 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தவிர்த்து பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் ஏ பிரிவில் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும்.
இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 பிரிவில் இருந்து 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். ஜூன் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டியும் அதைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
ஆப்கன் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், 14 மாத இடைவேளைக்கு பின்னர் மூத்த வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் 20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தனர். அப்போதே இருவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.