டி20 உலகக்கோப்பை தொடர்..பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இந்தியாவை வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் பெயரை நிரஞ்சன் ஷா மைதானம் என மாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய் ஷா, “2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நாம் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று மக்களின் இதயங்களை வென்றோம்.
2024 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.
இந்த விழாவில் ரோஹித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் முன்னிலையிலேயே ஜெய் ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ஷா, ரோஹித் சர்மா தொடர்ந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கேப்டனாக இருப்பார் என்று கூறினார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி திரும்புவதற்கு முன்பு தேர்வாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையே, காயத்திற்காக தற்போது சிகிச்சை பெற்று வரும் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பையில் அணியின் துணை கேப்டனாக இருப்பார் என ஜெய் ஷா அறிவித்தார். மேலும், பயிற்சியாளர் குழுவை பொறுத்தவரை, டி20 உலகக்கோப்பையின்போது ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்றும் அவரது குழு பயிற்சியை கவனித்துக் கொள்ளும் எனவும் ஜெய் ஷா கூறினார்.