அஜித்துடன் மீண்டும் ஜோடிசேரும் தபு…?
அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 62 வது படமாகும். ஆக்ஷன் த்ரில்லராக தயாராகிவரும் இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. த்ரிஷா, ரெஜினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
விடாமுயற்சியின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. அதன் பிறகு பல கட்டங்களாக அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மகிழ்திருமேனி. தற்போதும் படக்குழு அங்குதான் உள்ளது.
ஒரு படம் முடிந்து பல மாதங்கள் கழித்து அடுத்தப் படத்தை தீர்மானிக்கும் அஜpத், அதிசயமாக தனது அடுத்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரை முடிவு செய்துள்ளார். மார்க் ஆன்டனி மூலம் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அஜpத்தின் 63 வது படத்தை இயக்குவதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கான அலுவலக பூஜை பொங்கலையொட்டி சென்னையில் நடந்தது. எனினும், இயக்குநர், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படம் குறித்து இதுவரை வரவில்லை.
இந்நிலையில், அஜித்தின் ஜோடியாக தபு இந்தப் படத்தில் நடிக்கக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது. ராஜீவ் மேனன் இயக்கத்தில் 24 வருடங்களுக்கு முன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித், தபு இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தில் அப்பாஸ் – ஐஸ்வர்யா ராய், மம்முட்டி – ஐஸ்வர்யா ராய் ஜோடியை விடவும் அஜித் – தபு ஜோடியே பேசப்பட்டது.
அஜித் 63 படம் குறித்து யூகமாக சொல்லப்படும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படலாம்.