தை அமாவாசை 2024 : தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்..? தப்பி தவறி கூட இந்த விஷயங்களை செய்யாதீங்க…
அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை வரும். இவை சிறப்பு வாய்ந்தது என்றாலும், வருடத்தின் 3 அமாவாசைகள் மிகவும்
முக்கியமானது. அது என்னவென்றால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகும். இந்நாளில், கண்டிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும்.
அமாவாசை அன்று ஸ்நானம், தானம் செய்வதன் மூலம் பித்ரு தோஷம், காலசர்ப்ப தோஷம், சனி தோஷம் நீங்கும். அதே வேளையில் பல பிறவிகளில் செய்த பாவங்கள் அழிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதுமட்டுமின்றி, இந்த தை அமாவாசை அன்று சில விசேஷ காரியங்களை செய்தால் உங்கள் துக்கங்கள் பிணிகள் அனைத்தும் விலகும். அதுபோல், இந்நாளில் விரதமிருந்து அவர்களை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் வாழ்வில் அமைதி, செல்வம், நிம்மதி ஆகியவை கிடைக்கும்.
மேலும் அமாவாசை என்பது, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியில் இணையும் நாள் ஆகும். எனவே, இந்த தினத்தில் எந்த காரியத்தை செய்தாலும், கண்டிபாக அது வெற்றி அடையும். எனவே, தை மாதம் அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்…
தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்:
இந்த ஆண்டு தை அமாவாசையானது பிப்ரவரி 9ஆம் தேதி 2024 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அமாவாசையானது திதியானது பிப்ரவரி 9ஆம் தேதி 2024 அன்று காலை 08.05 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி 2024 அன்று அதிகாலை 4:28 மணிக்கு முடியும். திதி கொடுக்க நல்ல நேரம் காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்.
தை அமாவாசையன்று என்ன செய்ய வேண்டும்:
இந்தாண்டு, தை அமாவாசை வெள்ளிக்கிழமை வருவதால், முந்தைய நாளுக்கு பதிலாக புதன் அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் அந்நாளில், தர்ப்பணம் கொடுப்பவர் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, விரதம் இருக்க வேண்டும்.
இந்த தை அமாவாசை நாளில் பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் கணவரை இழந்த பெண் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் வீட்டில் எள், தண்ணீர் இரைத்து நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அம்மாவாசை நாளில் நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் கடல், ஆறு, குளம் போன்றவற்றின் கரையில் இருந்து உங்களின் மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒருவேளை உங்களால் இங்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால் இவ்வாறு வீட்டில் செய்யலாம்.
தை அமாவாசையன்று என்ன செய்யக் கூடாது:
தை அமாவாசை அன்று வீட்டை சுத்தம் செய்வது, துடைப்பது, விளக்கை கழுவுவது ஆகியவற்றை செய்யவே கூடாது.
அதுபோல் இந்த தை அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலமிடுதல், மணி அடித்து பூஜை செய்தல் போன்றவை செய்யவே கூடாது.
தை அமாவாசை நாளில், இறைச்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றை சாப்பிட்டக் கூடாது.
தை அமாவாசை அன்று பெற்றோரை இழந்த பெண்கள் விரதம் இருக்கலாம் ஆனால் சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
தை அமாவாசை நாளில் காகம் உணவை எடுக்காமல், நீங்கள் உணவு சாப்பிடக் கூடாது.
அதுபோல, தை அமாவாசை அன்று தர்ப்பணம், திதியை மாலை வேளையில் கொடுக்கக் கூடாது.