நல்ல கண்ணை தொடைச்சுட்டு பாருங்க.. பேஸ்ட்டு போட்டு ஒட்டுவதுபோல ரெண்டு காரை ஒன்றாக இணைத்த மாணவர்கள்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக ஜிம்னி (Jimny) இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் சைஸ் கொண்ட ஆஃப்ரோடு எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடல் உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
சுஸுகி பிராண்டின் கீழே இந்த கார் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இரண்டு ஜிம்னி கார்களை ஒன்றாக இணைத்து ஒரு பிரமாண்ட வாகனமாக அதனை உருவாக்கி இருக்கின்றனர் மாணவர்கள் சிலர். இந்த சம்பவம் ஜப்பான் தலைநகரம் டோக்யோவிலேயே அரங்கேறி இருக்கின்றது.
தற்போது அங்கு 2024 டோக்யோ ஆட்டோ சலோன் (2024 Tokyo Auto Salon) கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி மேடையில் வைத்தே இரண்டு ஜிம்னி கார்களை ஒன்றாக இணைத்து தயாரிக்கப்பட்ட கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த மாடிஃபிகேஷனால் அந்த வாகனம் ஹம்மர் சொகுசு காரின் தோற்றத்திற்கு மாறி இருக்கின்றது. நிப்பான் ஆட்டோமொபைல் காலேஜ் எனும் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழுவே இரண்டு ஜிம்னியை இணைத்து ஒரே கார் மாடலாக தயார் செய்தவர்கள் ஆவார்கள். இந்த மாடிஃபிகேஷனைத் தொடர்ந்து காரின் எஞ்சின் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் அவர்கள் மாற்றம் செய்திருக்கின்றனர்.
அந்தவகையில், சுஸுகி ஜிம்னியில் பயன்படுத்தப்பட்டிருந்த வழக்கமான எஞ்சின் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக வி6 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. சுஸுகியின் புகழ்பெற்ற எஸ்குடோ எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு வரும் மோட்டாரே இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காருக்கு நேட்ஸ் ஷாக்டோன் ஜிம்னி ஜே1 (NATS Shakotan Jimny J1) என்கிற பெயரையும் அவர்கள் சூட்டி இருக்கின்றனர்.
தனித்துவமான பெயரைப் போலவே தனித்துவமான தோற்றம் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக மிகவும் தாழ்வான தோற்றம் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த கார் சாலையில் நகருமே என்பதே மிகப் பெரிய சந்தேகமாக இருக்கின்றது. ஆனால், இது நகரும் திறன் கொண்ட வாகனம் ஆகும்.
சொல்லப்போனால் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் அது இயங்கும். இதற்காக 2.5 லிட்டர் வி6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 160 குதிரை திறனை வெளியேற்றும். இத்துடன் கூடுதலாக சில சிறப்பம்சங்களும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், காரின் பின் பக்கத்தில் 12 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 பேஸ் ஸ்பீக்கர்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவை காரின் பின் பக்க பூட் பகுதியிலேயே இடம் பெற்றிருக்கின்றன. இந்த சவுண்ட் சிஸ்டம் டைகாக் (Diecock) பிராண்டுடையது ஆகும். இதேபோல், இந்த காரில் டோயோ பிராண்டின் டயர்கள் மற்றும் ஐஎம்எல்ஏ-விடமிருந்து கஸ்டம் செய்யப்பட்டு பெறப்பட்ட வீல் ஆகியவையே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த காரில் எத்தனை பேரால் பயணிக்க முடியும் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும் இரண்டு கார்களை ஒன்றாக இணைத்திருப்பதால் 8க்கும் அதிகமானோரால் பயணிக்க முடியும் என்று மட்டும் நம்மால் யூகிக்க முடிகின்றது. மேலும், இந்த காரின் மேற்கூரையில் மிதிவண்டிகளை ஏற்றிச் செல்லும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட பேனல்கள் முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்தகைய வாகனத்தையே கல்லூரி மாணவர்கள் தங்களின் தனி திறமையைக் காண்பிக்கும் வகையில் வடிவமைத்து இருக்கின்றனர். உண்மையில் இந்த வடிவமைப்பைப் பார்த்து கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமல்ல சுஸுகியே பிரம்மித்து போயிருக்கும்.