அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!
லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல துணை அலுவலகத்தில் பணிபுரிந்த அங்கித் திவாரி எனும் அதிகாரி திண்டுக்கல் மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் 13 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு டிஜிபியிடம் அமலாக்கத்துறை மதுரை மண்டல துணை அலுவலகத்தின் உதவி இயக்குநர் புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் 35 பேர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்வதற்காக மனு அளித்திருந்தனர். அதோடு, அமலாக்கத்துறையினரும் அங்கிட்டு வாரியை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தனர்.