மனச திடப்படுத்திக்கோங்க.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் மழை இருக்குமா? இருக்காதா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வறண்ட வானிலையே நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “ஜனவரி 29 ஆம் தேதி மற்றும் ஜனவரி 30 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
பிப்ரவரி 3 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 4 ஆம் தேதி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: ஜனவரி 29 ஆம் தேதி மற்றும் ஜனவரி 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 30 – 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 23 – 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 – 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்தே மழை முற்றிலுமாக பொய்த்துப்போய் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பிப்ரவரி மாதத்திலாவது மழை பொழிவு இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.