எங்கள் வீடுகளை பறித்துக்கொண்டு 2 மில்லியன் மதிப்புடைய வீட்டில் வாழ்கிறார்… இந்திய வம்சாவளிப்பெண் குமுறல்
தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர், தன்னுடைய வீட்டை இழந்த நிலையில், தான் தவறாக குற்றம் சாட்டப்பட்டதற்கு காரணமாக இருந்த நிறுவனத்தின் தலைவரோ, 2 மில்லியன் பவுண்டுகள் பதிப்புடைய மாளிகையில் சொகுசாக வாழ்வதாக குமுறுகிறார்.
சிறையிலடைக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண்
இந்திய வம்சாவளியினரான சீமா மிஸ்ரா, தபால் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிவந்த நிலையில், 2010ஆம் ஆண்டு, 74,000 பவுண்டுகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, கர்ப்பிணியாக இருந்த அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டது சீமா மட்டுமல்ல. அவரைப்போலவே, sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த 700 தபால் அலுவலக பணியாளர்கள், மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் சிலர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்கள்.
வீடு பறிமுதல்
சிறையிலடைக்கப்பட்டதுமின்றி, சீமா கையாடல் செய்ததாக கூறப்பட்ட தொகைக்காக, அவரது வீடும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீமா தவறாக குற்றம் சாட்டப்பட்டதுமின்றி, இருந்த ஒரு வீட்டையும் இழந்த நிலையில், சீமா முதலான தபால் அலுவலகப் பணியாளர்கள் தவறாக தண்டிக்கப்பட காரணமாக இருந்த Horizon என்னும் சாஃப்ட்வேரை உருவாக்கிய Fujitsu என்னும் நிறுவனத்தின் தலைமை எக்சிகியூட்டிவாக பணியாற்றிய Paul Patterson என்பவரோ, சீமா பணி செய்த தபால் அலுவலகத்திற்கு சற்று தொலைவிலேயே, 2.35 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பங்களாவில் சொகுசாக வாழ்ந்துவருகிறார்.
இந்திய வம்சாவளிப்பெண் குமுறல்
மக்கள், தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வீடு வாங்கி வாழவேண்டும். ஆனால், சிலர் மற்றவர்கள் இரத்தத்தில் வீடு வாங்கி வாழ்கிறார்கள் என Paul Pattersonஐ குற்றம் சாட்டுகிறார் சீமா.
விடயம் என்னவென்றால், Paul Patterson மீது தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், நாங்கள் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட விடயத்தில் Fujitsu நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று கூறும் சீமா, அந்நிறுவனம் தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கவேண்டும், அந்த ஊழலில் பங்குடைய ஒவ்வொருவரும் தண்டிக்கப்படவேண்டுமென கொந்தளிக்கிறார்.
இதற்கிடையில், Paul Patterson முதலான சிலர், இந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.