ரோகித் சர்மாவுடன் பேசியதே கிடையாது.. இப்போது மொத்தமாக மாறிவிட்டது.. இளம் வீரர் நெகிழ்ச்சி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகிய போது, அவருக்கு மாற்று வீரராக இளம் வீரர் ரஜத் பட்டிதர் சேர்க்கப்பட்டார். இதற்கு இந்திய ஏ அணிக்காக ரஜத் பட்டிதர் சிறப்பாக ஆடியதே காரணமாக அமைந்தது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார்.
இந்த நிலையில் 2வது போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், ரஜத் பட்டிதர் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் இணைந்த அனுபவம் குறித்து இளம் வீரர் ரஜத் பட்டிதர் பேசுகையில், காயத்தில் இருந்து மீண்டு வந்த சில மாதங்களிலேயே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவது எனக்கு பெருமைமிக்க தருணம். இந்திய ஏ அணிக்காக விளையாடி வந்த எனக்கு, இப்போது இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய போது ஏராளமான இந்திய வீரர்களுடன் விளையாடிய அனுபவம் உள்ளது. ஆனால் ராகுல் டிராவிட் உடன் கடந்த 2 தொடர்களாக தான் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அதேபோல் ரோகித் சர்மாவுடன் நான் பெரியளவில் உரையாடியதில்லை. தற்போது வலைப்பயிற்சியின் போது அவருடன் தொடர்ந்து வருகிறேன். அவரின் ஃபீல்ட் செட்டப்பை கவனிக்கிறேன். பேட்டிங் செய்யும் பிட்ச் பற்றி உரையாட முடிகிறது. இந்த உரையாடல் என் மனதிற்குள் நம்பிக்கையை அதிகரிக்கிறது. எனது பேட்டிங் ஸ்டைலில் கொஞ்சம் ஆக்ரோஷம் இருக்கும்.
அறிமுகம் முதலே அதிரடியாகவே பேட்டிங் செய்து வருகிறேன்.
அதுவே எனக்கு பழக்கமாக மாறிவிட்டது. அதனால் பெரியளவில் என் பேட்டிங்கில் நான் மாற்றங்கள் செய்யவில்லை. மேலும், ஆர்சிபி அணிக்காக ஆடிய போது விராட் கோலியுடன் நேரம் செலவிட்டுள்ளேன். அவர் எப்போது வலைப்பயிற்சியின் போது பேட்டிங் செய்தாலும், அவருக்கு பின் இருந்து கவனிப்பேன். குறிப்பாக அவரின் உடல்மொழி மற்றும் கால் நகர்த்தலை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.