ஜன.19-ல் மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம்!

திருச்சி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் நிலையில் ஶ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி ஜனவரி 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 நாட்கள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார்.

 

அயோத்தியில் ஜனவரி 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இத்திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல சர்ச்சைகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படாமலேயே திறக்க சங்கராச்சாரியார்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவே ஒரு அரசியல் நிகழ்வுதான் என விமர்சித்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக இந்நிகழ்வை புறக்கணித்துள்ளன.

தமிழ்நாடு வருகை: இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகை தருகிறார் பிரதமர் மோடி. ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாட்டுக்கு வரும் 19-ந் தேதி பிரதமர் மோடி வருகிறார். அன்றைய தினம் கேலோ விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம்: பின்னர் திருச்சி வரும் பிரதமா், சாலை மாா்க்கமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கநாத சுவாமியை தரிசனம் செய்கிறாா். திருச்சியிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமரின் வருகையையொட்டி அவரது சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், மற்றும் திருச்சி காவல்துறை உயரதிகாரிகள் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தியுள்ளனா்.

ஶ்ரீரங்கத்தில் ஆளுநர் ரவி: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று திருச்சி வருகை தந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வரவேற்றார். பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற ஆளுநர் ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்துக்கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் பிரதமர் நரேந்திர மோடி வருகை குறித்து கோயில் நிா்வாகிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ரவி ஆலோசனை செய்தார் .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *