தமிழ்நாடு பட்ஜெட் 2024: அமைச்சர்கள், ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனை அனைத்துத் துறை அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச் சொல்லும் அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சமநீதியையும் – சமநிதியையும் வழங்கித் தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது.
ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசானது ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிடவியல் கோட்பாட்டின் அரசு நிர்வாக வடிவமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாட்டின் பயனை நாம் அனைவரும் உடனடியாகவும், நேரடியாகவும் கண்டு வருகிறோம்.
இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருவதாகத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 விழுக்காடாக இருக்கிறது. மாநிலத்தின் பணவீக்கமானது 5.97 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம். புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இப்படி அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.
இது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உயர்த்தி வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதே ‘திராவிட மாடல்’ வளர்ச்சியின் இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அமைந்திருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.
இலக்கை அமைத்துக் கொள்வதுதான் வெற்றிக்கான முதல் படி. இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் பெருங்கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது. சமூகநீதி – கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு – உலகை வெல்லும் இளைய தமிழகம் – அறிவுசார் பொருளாதாரம் – சமத்துவ நோக்கில் மகளிர் நலம் – பசுமைவழிப் பயணம் – தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
குடிசை இல்லாத் தமிழ்நாடு – வறுமை ஒழிப்பு – பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு – விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் – மாணவர்களுக்கு கல்விக் கடன் – காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – நீர்நிலைப் பாதுகாப்பு – கணினிமயமாக்கம் – சாலைகள் – குடிநீர்வசதிகள் – தமிழ் வளர்ச்சி – தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு – தொல்லியல் – விண்வெளி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது.
இந்த அறிக்கையின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு சொல்லும் – எழுத்தும் – அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது என்பதுதான். ”ஆடுகளை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு விவசாயி, ஒரே ஒரு ஆட்டை மட்டும் தோளில் தூக்கிப் போட்டு சுமந்து வருவான். அது காலில் அடிபட்டு நடக்க முடியாத ஆடாக இருக்கும். அதற்குப் பெயர்தான் சமூகநீதி” – என்று சொன்னவர் தலைவர் கலைஞர். அந்த அடிப்படையில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைப்பதாக இதன் ஒவ்வொரு அறிவிப்பும் அமைந்துள்ளன. நமது கையில் இருக்கும் வளத்தை, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதாக இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளோம். கடந்தகால அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு, நிதிச் சூறையாடல்கள் நடந்து முடிந்த காலத்தில், ஆட்சிக்கு வந்தது திமுக என்பதை அனைவரும் அறிவீர்கள். கடன்களை மட்டுமே சொத்துகளாக வைத்து விட்டுப் போனார்கள். அதனை மனதில் வைத்து ‘நிதி இல்லை’ என்ற பல்லவியையே பாடிக் கொண்டிராமல் நிதியைத் திரட்டும் செயல்களைச் செய்தோம்.
இதற்கிடையில் ஒன்றிய அரசானது மாநிலத்தின் நிதி வளத்தை சுரண்டும் செயல்களைத் தொடர்ந்து செய்தது. நியாயமாக மாநிலத்துக்குத் தர வேண்டிய நிதி ஒதுக்கீடுகளையும் தர மறுத்தது. கடன் வாங்கித் திட்டங்களைத் தீட்டுவதற்கும் தடை செய்தது ஒன்றிய அரசு. இப்படி அனைத்துப் பக்கங்களிலும் வந்த நிதி நெருக்கடிகளையும், நிர்வாகத் தொல்லைகளையும் தாண்டியும், பொறுத்துக் கொண்டும்தான் இத்தகைய வெற்றியைத் தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது.
இதுபோன்ற பொருளாதார நெருக்கடியைத் தருவதன் மூலமாகத் தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை வளர்ச்சிச் செயல்பாட்டைத் தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் அந்தத் தடைகளையும் வென்று, அனைவர்க்குமான வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. ஏழு பெரும் கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றும்போது தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக, தலைசிறந்த மாநிலமாகத் திகழும் காலம் விரைந்து ஏற்படும்.
தலைசிறந்த – தொலைநோக்குப் பார்வை கொண்ட – கனிவான – பொருளாதாரச் சமநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டுகிறேன். திராவிட மாடல் அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் மாபெரும் கடமையை மிகச் சரியாக ஆற்றி இருக்கிறார் அமைச்சர். அவருக்குத் துணையாக இருந்து, பொருளாதார வளத்தைச் சமூகச் சீர்திருத்த வளர்ச்சிக்குப் பயன்படும் வகையிலான அறிக்கையாக அமையக் காரணமாகவும் இருந்த நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிதித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
திராவிட மாடல் ஆட்சி உருவானபோது, “இந்த ஆட்சியானது ஒரு விவசாயிக்கு மழையாகவும், ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும், ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், ஒரு தொழிலதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் செயல்படும்” என்று நான் குறிப்பிட்டேன். அப்படித்தான் கழக அரசு செயல்பட்டு வருகிறது. இனியும் அப்படித்தான் செயல்படும் என்பதை நாட்டுக்குச் சொல்லும் அறிக்கைதான் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை.
இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும். துறைசார்ந்த அமைச்சர்களும், துறையின் செயலாளர்களும் இந்தத் திட்டங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ அதனை மனதில் வைத்துச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களுக்கும் அறிவிப்புகள் பரந்து விரிந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான திட்டங்களை மிகமிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.