தமிழ்நாடு பட்ஜெட் 2024: புதிய தொழில்நுட்பத்திற்கு தனி நிதி ஒதுக்கீடு.. வாவ்..!
2024-2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டுப் பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர், இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2-வது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது எனத் தெரிவித்தார்.
இயற்கை பேரிடர் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய அரசு உடனான போராட்டங்கள் மத்தியில் தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சி பாதையைத் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த துறைகள் நீண்ட காலமாகப் பெரும் துணையாக நிற்கிறது. டைடல் பார்க் முதல் பின்டெக் பாலிசி வரையில் டெக் நிறுவனங்களையும், முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் ஈர்க்கும் வண்ணம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் வேகமாக வளர்ச்சி வரும் தொழில்நுட்ப துறைக்கு ஏதுவாகப் புதிய தொழில்நுட்ப துறையில் தனிப்பட்ட கவனத்கை செலுத்த துவங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. மத்திய அரசு இதுவரையில் ஏஐ-க்கான கொள்கை உருவாக்குவது குறித்து யோசித்து வருகிறது.
ஆனால் தமிழ்நாடு அரசு ஒரு படிக்கு மேல் சென்று, புதிய தொழில்நுட்பத்திற்கான அடிப்படை கட்டமைப்புகளையும், ஊக்குவிப்பும் அளிக்க AI, NLP, LLM எனச் செயற்கை நுண்ணறிவு, நேச்சுரல் லாங்குவேஜ் பிராசசிங், லார்ஜ் லாங்குவேஜ் மாடல் ஆகிய தொழில்நுட்ப துறையில் சுமார் 5 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்ற நடைமுறையைப் பின்டெக் துறைக்குச் செயல்படுத்தப்பட்டு, தற்போது கொள்கை வரையில் வளர்ச்சி சென்னை நாட்டின் பின்டெக் நகரமாக மாறி வருகிறது.
இதை தொடர்ந்து வேலைவாய்ப்பு தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்து ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதலையும் இந்த புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை பயன்படுத்த தேவைப்படும் வரையறைகளை தெளிவாக வகுத்திட முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மிஷன்) ஒன்று ஏற்படுத்தப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மிஷன்-ல் சிறந்த கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், மின்னணு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் துறை வல்லுநர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருப்பார்கள் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மிஷன் மூலம் மருத்துவ துறை முதல் தொழிற்துறை வரையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இதன் வாயிலாக AI கொள்கை உருவாக்கி தனிப்பட்ட முறையில் முதலீட்டை ஈர்க்க முடியும்.