மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் – அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, ஏற்கனவே விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர்க்கான விடுதி திட்டங்கள் இருக்க கூடிய நிலையில் பெண்களுடைய கல்வி, உரிமை, பொருளாதாரத்தில் அதிகாரம் அளித்தல், என்ற முறையில் அரசு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாநில மகளிர் கொள்கைக்கு இன்று முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2001 ஒன்றிய அரசு மகளிர் கொள்கை கொண்டு வந்துள்ளது. தற்போது 23 ஆண்டுகளுக்கு பின்னர் மாநில மகளிர் கொள்கை தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. 2021 பொறுப்பேற்றவுடன் நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கையின் போது இது அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் பெண்களுக்கான தனியாக ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பு இன்று நடைமுறைப்படுத்துகிறது. பெண்களுக்கு அதிக பங்களிப்பு மற்றும் வாய்ப்பு கொடுப்பதற்காக இந்த கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம் உதவி எண்கள் பெண்களுக்காக செயல்படுத்துவது, பாலின பாகுபாடுகள் இல்லாமல் செய்வது, பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மேலும் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான வளர்ச்சி என்பது தான் இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளது. மேலும் இதனை விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார் என தெரிவித்தார்.