தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி பயணம்..!
வருகிற 13-ம் தேதி பொள்ளாச்சிக்கு பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.அங்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழா பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு ஆச்சிப்பட்டியில் உள்ள மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக அந்த இடத்தில், மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் விழா நடைபெற உள்ள இடத்தை நேற்று அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 13-ம் தேதி பொள்ளாச்சியில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதுமட்டுமின்றி இந்த விழாவில், முதல்வர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைக்க உள்ளார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து பயனாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தி.மு.க இருக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இப்படி சொல்ல, சொல்ல சொல்ல நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் சொல்வது எங்களுக்கு இன்னும் வேகமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைதான் கொடுக்கிறது என தெரிவித்தார்.