இன்று இரவு ஸ்பெயின் செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்..!
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். இன்று (ஜன.27) இரவு 08.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் மூலம் துபாய் வழியாக ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டிற்கு செல்கிறார்.இன்று வெளிநாடு செல்லும் முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
ஸ்பெயின் நாட்டுக்கு சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதல்வர் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.முதலமைச்சருடன் தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயலாளர் உள்ளிட்டோரும் ஸ்பெயின் செல்கின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், மேலும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ளார்.