தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்..!
தமிழக கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி கவர்னர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது.
ஆனால், கவர்னர் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து விட்டு பேரவையிலிருந்து வெளியேறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட மத்திய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் வரும் வியாழக்கிழமை தமிழகம் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் கவர்னர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.