அமித்ஷாவை இன்று சந்திக்கின்றனர் தமிழக எம்பிக்கள்! பேரிடருக்கு கூடுதல் நிவாரண நிதி கேட்க திட்டம்

சென்னை: சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக எம்பிக்கள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர்.

கடந்த 2023ம் ஆண்டின் இறுதி காலகட்டம் தமிழ்நாட்டிற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. இவர்களுக்கு நிவாரணமாக ரூ.6000-ஐ தமிழக அரசு வழங்கியது. இந்த தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றொரு சவாலை தென் தமிழ்நாடு எதிர்கொண்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளம் புகுந்தது. உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என பேரிடரை இந்த இரண்டு மாவட்டங்களோடு சேர்ந்து தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளும் சந்தித்தன. இவர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் கொடுக்கப்பட்டது.

இந்த இரண்டு பேரழிவுகளையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், இதனை எதிர்கொள்ள தற்காலிகமாக ரூ.7,033 கோடியும், நிரந்தரமாக ரூ.12,659 கோடியும், உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். அடுத்த சில நாட்களில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பாதிப்புகளை ‘தேசிய பேரிடராக’ அறிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

மட்டுமல்லாது, “தமிழகத்திடமிருந்து வாங்கியதை விட அதிகமாக கொடுத்திருக்கிறோம். 2014-2023 மார்ச் வரை தமிழகத்திடமிருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6.96 லட்சம் கோடியை கொடுத்திருக்கிறது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ரூ.37,965 கோடியும், பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, ரூ.11,116 கோடியும், கிராமப்புறத்தில் வீடுகள் கட்டுவதற்காக ரூ.4,836 கோடியும் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.36,350 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.37,370 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். இந்த கணக்கில் சில தவறுகள் இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர்.

இப்படி இருக்கையில் தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு விடுவிக்க கோரி, தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி எம்பிக்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால், அவரால் நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று எம்பிக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். எனவே திட்டமிட்டபடி தமிழக எம்பிக்கள் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசின் கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *