இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்.. முதல் வீரராக சாதனை படைத்து.. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கப் போகும் அஸ்வின்
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது.
இத்தொடரில் டி20 கிரிக்கெட்டை போல அதிரடியாக விளையாடி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.
இருப்பினும் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்தியாவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்களைத் தாண்டி இங்கிலாந்து வெல்வது கடினம் என்றே சொல்லலாம். அதிலும் தற்சமயத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய மைதானங்களில் எப்போதுமே எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறார்.
தமிழகத்தின் பெருமை:
எனவே அனுபவத்திலும் தரத்திலும் பன்மடங்கு உயர்ந்துள்ள அவர் இத்தொடரில் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று உறுதியாக நம்பலாம். முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அஸ்வினுக்கு அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி ஹர்பஜன் சிங் போன்ற சீனியர்களை கழற்றி விட்டு தொடர்ச்சியான வாய்ப்புகளையும் ஆதரவையும் கொடுத்தார்.
அதை சரியாக பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்த அஸ்வின் தம்முடைய 13 வருட டெஸ்ட் கேரியரில் இதுவரை 95 போட்டிகளில் 490 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே இத்தொடரில் இன்னும் 10 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த 9வது வீரர் என்ற என்ற சாதனையை அவர் படைப்பார்.
அத்துடன் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுக்கும் 2வது இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைப்பார். சொல்லப்போனால் அனில் கும்ப்ளே லெக் ஸ்பின்னர் என்ற நிலைமையில் இன்னும் 10 விக்கெட்களை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுக்கும் முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சரித்திரத்தையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைப்பார்.