தமிழ்நாட்டின் அடிநாதத்துக்கே ஆபத்து.. குரூப் 4 தேர்வு! ஓபிஎஸ் சுட்டிக்காட்டிய முக்கிய விசயம்

சென்னை: குரூப் – 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைப்பை கண்டித்து தமிழ்நாடு அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் அடிநாதம் என்று அழைக்கப்படும் சமூக நீதிக்கு ஆபத்து இருப்பதாக எச்சரித்து உள்ளது.

 

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசால் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். குறிப்பாக அமைச்சுப் பணியாளர்கள்தான் அரசுத் துறைகளின் அடித்தளம். அரசு ஊழியர்கள் இருந்தால்தான் மக்களின் திட்டங்கள் விரைவில் மக்களை சென்றடையும்.

ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து கொண்டு இருக்கிறது. 2021-ஆம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், இன்று ஐந்து இலட்சமாக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் பெருமளவுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் ஆண்டிற்கு 70,000 என்ற வீதத்தில் நிரப்பப்பட வேண்டுமென்று நான் ஏற்கெனவே எனது அறிக்கைகள் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்கூட 55,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனால், இன்று குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கையில் வெறும் 6,244 இடங்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பது இளைஞர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து இருக்கின்ற நிலையில், ஒரே ஒரு முறை தான் கிட்டத்தட்ட பத்தாயிரம் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இவர்கள்கூட பணியில் முழுமையாக சேர்ந்ததாக தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் 6,244 குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளி வந்திருக்கிறது. இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது. தி.மு.க. அரசின் இந்த அறிவிப்பு மூலம் அரசுப் பணிகள் வெகுவாக பாதிப்படையும் என்பதோடு, இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *