புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் மாஸ் சம்பவம்.. பெங்களூர் காளையை தெறிக்க ஓடவிட்ட நரேந்தர்
10வது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் – பெங்களுரு புல்ஸ் அணிகள் இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் காளை (Bengaluru Bulls) என பெயர் வைத்துக் கொண்டு தமிழ் தலைவாஸ் ரெய்டர்களிடம் பம்மிப் பதுங்கியது அந்த அணி.
இனி வரும் போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்தால் தான் பிளே – ஆஃப் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் உள்ளது தமிழ் தலைவாஸ் அணி. அந்த அழுத்தமான சூழ்நிலையில் இந்தப் போட்டியில் முதல் பாதி ஆட்டத்திலேயே பெங்களூர் அணியை கதறவிட்டது தமிழ் தலைவாஸ். அப்போதே 25 – 14 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
தமிழ் தலைவாஸ் அணியின் தடுப்பாட்டம் கொஞ்சம் மோசமாக இருந்த போதும் ரெய்டுகளில் பட்டையைக் கிளப்பியது. குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் நரேந்தர் 15 ரெய்டுகளில் 10 வெற்றிகரமான ரெய்டுகளை செய்தார். மூன்று ரெய்டுகளில் புள்ளிகள் எடுக்காமலும், இரண்டு ரெய்டுகளில் மட்டும் தோல்வி அடைந்தும் இருந்தார். மொத்தம் 10 தொடு புள்ளிகளையும், 4 போனஸ் புள்ளிகளையும் பெற்று தெறிக்க விட்டார். அவருக்கு அடுத்தபடியாக அஜின்க்யா பவார் 17 ரெய்டுகளில் 11 புள்ளிகள் பெற்றார்.
ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 45 புள்ளிகளும், பெங்களுரு புல்ஸ் 28 புள்ளிகளும் பெற்றன. 17 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது தமிழ் தலைவாஸ் அணி. இதன் மூலம் 5 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் அதே பத்தாவது இடத்தில் நீடிக்கிறது. இனி வரும் போட்டிகளில் வெல்வதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி படிப்படியாக புள்ளிப் பட்டியலில் முன்னேற முடியும்.