Google Map உதவியுடன் திருடனை துரத்தி பிடித்த தமிழக வாலிபர்: Technology-யை சரியாக பயன்படுத்தியது எப்படி?
தந்தையின் செல்போனை திருடிய நபரை சில மணி நேரத்தில் கூகுள் மேப்பின் உதவியுடன் தமிழக இளைஞர் ஒருவர் திறமையாக பிடித்து இருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடு போன தந்தையின் செல்போன்
தமிழ்நாட்டை சேர்ந்த ராஜ் பகத்(Raj Bhagat) என்ற இளைஞர் ஒருவர் கூகுள் மேப்பின் உதவியுடன் காணாமல் போன தந்தையின் பை மற்றும் செல்போனை மீட்டுள்ளார்.
ராஜ் பகத் என்பவரின் தந்தை நாகர்கோவிலில் இருந்து திருச்சி செல்வதற்காக நாகர்கோவில் கச்சேகுடா விரைவு ரயில்(Nagercoil Kacheguda express) பயணித்துள்ளார்.
இந்த பயணத்தின் போது ரயிலில் இருந்த கூட்டத்தை பயன்படுத்தி நபர் ஒருவர் ராஜ் பகத் தந்தையின் பை மற்றும் செல்போன் ஆகிய பொருட்களை திருடிவிட்டு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.
இதனை தந்தை அறிந்து கொண்ட பிறகு, அதிகாலை 3.51 மணியளவுக்கு நண்பரின் தொலைபேசியில் இருந்து மகன் ராஜ் பகத்திற்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக தந்தையின் செல்போன் இருப்பிட குறிப்பு(Mobile location ) நண்பர் ஒருவரிடம் இருந்ததை தொடர்ந்து, விரைவாக கூகுள் மேப்பின் டிராக்கிங் வசதியை பயன்படுத்தி திருடனின் இருப்பிடத்தை ராஜ் பகத் ஆராய தொடங்கியுள்ளார்.
அப்போது திருடன் நாகர்கோவில் திரும்பும் மற்றொரு ரயில் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
கையும் களவுமாக சிக்கிய திருடன்
ராஜ் பகத் நண்பர் ஒருவரின் உதவியுடன் உள்ளூர் பொலிஸாரை தொடர்பு கொண்டு, ரயில்வே பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.
இதையடுத்து திருடனுக்காக நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் ராஜ் பகத் காத்திருந்துள்ளார், ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக திருடனை துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை.
இருப்பினும் கூகுள் மேப்பின் உதவியுடன் தொடர்ந்து பின் தொடர்ந்த ராஜ் பகத், திருடனை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் வைத்து கையும் களவுமாக பிடித்ததோடு, தந்தையின் செல்போன் மற்றும் பையை பத்திரமாக மீட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜ் பகத்தின் விவேகமான மற்றும் புத்திசாலித்தனமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.