தஞ்சை, வேலூர், சென்னை.. தமிழ்நாட்டிற்கு வரும் புதிய விமான நிலையங்கள்.. மொத்தமாக எல்லாமே மாறுதே
வேலூர்: அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் பின்வரும் விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.
புதிய விமான நிலையம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் – அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.
வேலூர் விமான நிலையம்: 97 ஏக்கர் பரப்பளவில், சிறிய விமானங்களுக்கு 850 மீட்டர் ஓடுபாதையுடன் கூடிய வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இது அருகிலுள்ள பகுதிகளுக்கு விரிவான வளர்ச்சியைக் கொண்டுவரும். ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், ராணிப்பேட்டை, சித்தூர் மற்றும் பல பகுதிகள் இந்த விமானம் நிலையம் காரணமாக மாற்றம் அடையும். விமான நிலைய செயல்பாடுதொடங்கிய பின் முக்கிய பெருநகர மையமாக இந்த பகுதி உருவெடுக்கும்.
இந்த திட்டமிடப்பட்ட விமான நிலையம் உள்ளூர் அளவில் விமான போக்குவரத்தை அதிகரிக்கும். அடுக்கு-II மற்றும் III நகரங்களுக்கு கணிசமான முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் இந்த விமான நிலையம் செயல்படும்.
நெடுஞ்சாலைகள், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், பொது போக்குவரத்து மற்றும் சமூக மையங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் இப்பகுதியில் வரும் நாட்களில் செழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையங்கள் அதிகரிப்பு; தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பின் மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.