டேஸ்ட்டியான ‘சிக்கன் சுக்கா வறுவல்’ – ஈஸியா ரெடி பண்ண சூப்பர் ரெசிபி!
அசைவ உணவுகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் சிக்கன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக சிக்கன் கொண்டு செய்யப்படும் வறுத்த, பொறித்த உணவுகள் என்றால் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது அனைவரும் விரும்பி உண்ணும் சிக்கன் சுக்காவை எளிய செய்முறையில் விரைவாக வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்றுதான். வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 3/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
இடித்த இஞ்சி மற்றும் பூண்டு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நுணுக்கிய காய்ந்த சிவப்பு மிளகாய் – 2 டீஸ்பூன்
எலும்பிச்சை சாறு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், நுணுக்கிய காய்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
அடுத்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பின்னர் அதில் அலசி வைத்துள்ள கோழி துண்டுகளை போட்டு இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக பிரட்டி கொள்ளுங்கள்.
பிறகு கடாயை மூடி 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.
அடுத்து கோழியுடன் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து 5 நிமிடங்களுக்கு நன்றாக வறுக்கவும்.
இறுதியாக ஒரு ஸ்பூன் எலும்பிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவு தான் விரைவில் சுவையான சிக்கன் சுக்கா வறுவல் தயார். இதை அனைவருக்கும் சூடாக பரிமாறி மகிழுங்கள்.