டாடா நிறுவன பங்குகளை வாங்க திட்டம்போடும் அம்பானி.. இது வேறலெவல் சம்பவமாச்சே..!!
இதுகுறித்த பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடந்து வரும் வேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – வால்ட் டிஸ்னி மத்தியிலான பேச்சுவார்த்தை உறுதியான நிலையில் டிசம்பர் மாதம் லண்டனில் இரு நிறுவனங்கள் மத்தியிலும் non-binding ஒப்பந்தம் கையெழுத்தாகி, கடந்த வாரத்தில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல் வெளியானது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் அடித்த அதிர்ச்சியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வால்ட் டிஸ்னி கட்டுப்பாட்டில் இருக்கும் 29.8 சதவீத டாடா ப்ளே பங்குகளை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – டாடா குழுமம் மத்தியில் பல பிரிவுகளில் பெரும் போட்டி இருந்தாலும் முதல் முறையாகப் பங்குகளைக் கைப்பற்றும் அளவுக்கு வந்துள்ளது. ஆனால் டாடா குழும நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் உப்பு முதல் விமானத் தயாரிப்பு வரையில் ஈடுபட்டு வருகிறது, இந்த நிலையில் பொழுதுபோக்குத் துறையில் பல வருடமாக இயங்கி வரும் டாடா ப்ளே நிறுவனப் பங்குகளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றத் திட்டமிட்டு வருவதால் லைம்லைட்டுக்கு வருவதோடு, தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. டாடா ப்ளே டிவி மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையைச் சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் கொடுத்து வருகிறது.
டாடா ப்ளே நிறுவனத்தில் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் சுமார் 50.2 சதவீத பங்குகளை வைத்துள்ளது, 29.8 சதவீத பங்குகள் வால்ட் டிஸ்னி-யிடமும், மீதமுள்ள பங்குகள் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek-யிடம் உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதமே Temasek, டாடா ப்ளே பங்குகளை டாடா சன்ஸ்-க்கு விற்கப் பேச்சுவார்த்தை துவங்கியது, ஆனால் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை.ரிலையன்ஸ், டாடா ப்ளே நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் தொலைக்காட்சி, OTT தளத்தில் பிரிவில் இருப்பது மட்டும் அல்லாமல் தொலைக்காட்சி டிஸ்ட்ரிபியூஷன் பிரிவிலும் இறங்கும்.