முகேஷ் அம்பானி-க்கு பல்பு கொடுத்த டாடா.. டிஸ்னி உடன் பேச்சுவார்த்தை..!!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் உப்பு முதல் விமானத் தயாரிப்பு வரையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பொழுதுபோக்குத் துறையில் பல வருடமாக இயங்கி வரும் டாடா ப்ளே நிறுவனப் பங்குகளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றத் திட்டமிட்டு வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
அதாவது இந்தியாவின் பிரபலமான OTT தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் இந்தியா உரிமையாளர் வால்ட் டிஸ்னி இந்தியா மொத்தமாகத் தனது வயாகாம் 18 உடன் இணைக்கும் பேச்சுவார்த்தையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீண்ட காலமாகத் தொடர்ந்த நிலையில் சமீபத்தில் இது உறுதியானது. இந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக வால்ட் டிஸ்னி இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கும் 29.8 சதவீத டாடா ப்ளே பங்குகளை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியானது.
ஆனால் டாடா குழுமத்தை மீறி எதுவும் நடக்காது என்பதால் முதலீட்டாளர்கள், டாடா ப்ளே பங்குகள் ரிலையன்ஸ் வசம் போகாது என நம்பினர், தற்போது நம்பியது வீண் போகவில்லை. டாடா ப்ளே தற்போது டிவி மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையைச் சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் கொடுத்து வருகிறது.
டாடா ப்ளே நிறுவனத்தில் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் சுமார் 50.2 சதவீத பங்குகளை வைத்துள்ளது, 29.8 சதவீத பங்குகள் வால்ட் டிஸ்னி-யிடமும், மீதமுள்ள பங்குகள் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek-யிடம் உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதமே Temasek, டாடா ப்ளே பங்குகளை டாடா சன்ஸ்-க்கு விற்கப் பேச்சுவார்த்தை துவங்கியது, ஆனால் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் டாடா குரூப், வால்ட் டிஸ்னி-யிடம் இருக்கும் டாடா ப்ளே பங்குகளை மொத்தமாக வாங்க முடிவு செய்துள்ளது, இதன் மூலம் கிட்டதட்ட 80 சதவீத பங்குகளை டாடா குரூப் கைப்பற்ற உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளது, இதில் டாடா ப்ளே நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெறும் என தகவல் வெளியானது.
டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் இருக்கும் அதன் மொத்த வர்த்தகத்தையும் கைகழுவ முடிவு செய்தது மூலம், கடந்த மாதம் இறுதியில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் இந்தியா வர்த்தகம், சொத்துகளை வயாகாம் 18 உடன் இணைக்க ஒப்பந்தம் செய்த நிலையில், தற்போது இந்தியாவில் எஞ்சியுள்ள டாடா ப்ளே பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.