Curvv EV, Harrier EV எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்… விரைவில் தொடங்கும் உற்பத்தி!

ஃபோர்டு இந்தியா நிறுவனத்திடமிருந்து வாங்கிய சனந்த் ஆலையிலிருந்து ஏப்ரல் மாதம் முதல் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. மேலும் நெக்ஸன் EV உற்பத்தியை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் Curvv EV மற்றும் Harrier EV கார்களை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களுக்கான மேலாண்மை இயக்குனர் சைலேஷ் சந்திரா கூறுகையில், இந்த வருடத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் Curvv EV அறிமுகம் செய்யப்படும். அதேப்போல் இந்த வருடத்தின் இறுதியில் Harrier EV கார் மற்றும் இண்டர்னல் கம்பஸ்டன் இஞ்சினில் இயங்கும் Curvv காரை அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறோம். அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களையும் குஜராத்தில் உள்ள சனந்த் ஆலையில் உற்பத்தி செய்யவுள்ளோம். முதலில் இங்கு நெக்ஸன் EV காரை உற்பத்தி செய்யப் போகிறோம் என்றார். கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ரூ.725.7 கோடி கொடுத்து ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து இந்த ஆலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

தற்போது சனந்த் ஆலையில் ஒரு வருடத்திற்கு மூன்று லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே இங்கு இண்டர்னல் கம்பஸ்டன் இஞ்சினில் இயங்கும் நெக்ஸன் காரின் உற்பத்தி பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் இந்த ஆலையிலிருந்து 4.2 லட்ச வாகனங்கள் உற்பத்தி செய்யுமளவிற்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

பயணிகள் வாகனங்களின் வளர்ச்சியை பொறுத்தவரை 5% அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த வருடம் சில கார்களை அறிமுகம் செய்யவுள்ளோம். ஆகையால் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையில் உள்ள வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை பெற இலக்கு வைத்துள்ளோம் எனக் கூறுகிறார் சைலேஷ் சந்திரா.

மேலும், தனிநபர்களுக்கான எலக்ட்ரிக் கார்களுக்கும் FAME சலுகையை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் வளர்ச்சி வேகமெடுக்கும். உதாரணமாக மகராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்த போது எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்ததை பார்க்க முடிந்தது என்றும் சந்திரா கூறினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கப்படுவது குறித்து அவரிடம் கேட்கையில், எந்தவொரு போட்டியாளர்கள் குறித்தும் நாங்கள் கவலைப்படுவதில்லை. இதுதான் எங்களது நிலை. இந்திய எலக்ட்ரிக் வாகனத் துறையில் பங்கேற்க விரும்புகிறவர்களையும் சார்ஜிங் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் மாற்றங்களை கொண்டு வருபவர்களையும் நாங்கள் தாராளமாக வரவேற்கிறோம். போட்டியை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. எந்தவொரு போட்டியாளரையும் நாங்கள் திறம்பட சமாளிப்போம். யாருக்கும் சிறப்பு முன்னுரிமை கொடுக்க கூடாது என்பதுதான் எங்களுடைய விருப்பம் என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *