7 ஆண்டுகளுக்கு பின் மாருதிக்கு ஷாக் கொடுத்த டாடா மோட்டார்ஸ்!! புதிய ராஜா நான் தான்னு சொல்லாமல் சொல்லுது
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தை சுமார் 7 வருடங்களுக்கு பிறகு ஒரு விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முந்தி உள்ளது. எந்த விஷயம் அது என்பதையும், மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. மாதத்திற்கு சராசரியாக 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் முழு மனதாக இறங்கவில்லை. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே சில எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது.
மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவின் 3வது பெரிய கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. 3வது இடத்தில் இருந்தாலும், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் என்கிற பட்டத்தை டாடா மோட்டார்ஸ் தட்டிப் பறித்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த பட்டத்தை மாருதி சுஸுகியிடம் இருந்து டாடா நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், கிட்டத்தட்ட கடந்த 7 வருடங்களாக இந்த பட்டத்தை மாருதி சுஸுகி வைத்திருந்தது. டாடா மோட்டார்ஸுக்கு இந்த பட்டம் எவ்வாறு கிடைத்தது என்றால், பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச (BSE)-இல் டாடா மோட்டார்ஸின் சந்தை மூலதனமாக்கல் மதிப்பு தொகை மாருதி சுஸுகியை கடந்து, ரூ.3.27 லட்ச கோடியை தொட்டுள்ளது.
அதுவே, பம்பாய் மார்க்கெட் எக்ஸ்சேஞ்சில் மாருதி சுஸுகியின் சந்தை மூலத்தனமாக்கல் மதிப்பு தொகை ஆனது ரூ.3.16 லட்ச கோடி ஆகும். கடந்த 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டாடா மோட்டார்ஸின் இந்த சந்தை மூலத்தனமாக்கல் தொகை 10% அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், ஜாகுவார் லேண்ட் ரோவரின் கார்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாகும்.
இங்கிலாந்தை சேர்ந்த லக்சரி கார் நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா குழுமத்தில் ஓர் அங்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இடையூறுகள் இல்லாத பண புழக்கத்திற்கு தான் நிர்ணயித்துக் கொண்ட இலக்குகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெற்றிக்கரமாக எட்டியுள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் டாடா குழுமத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.
சந்தை மதிப்பில் மாருதி சுஸுகியை டாடா மோட்டார்ஸ் முந்துவது ஒன்றும் புதியது அல்ல. ஆனால், இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட 7 வருடங்களாகி விட்டது. கடைசியாக, 2017ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.1.76 லட்ச கோடி சந்தை மதிப்புடன் முன்னிலை வகித்து இருந்தது. அந்த சமயத்தில் மாருதி சுஸுகியின் சந்தை மதிப்பு ஆனது டாடா மோட்டார்ஸை விட வெறும் ஆயிரம் கோடி மட்டுமே குறைவாக இருந்தது.
டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி நிறுவனங்களுக்கு அடுத்து, பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தற்சமயம் டாப்-5 இடங்களை பிடித்துள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பின்வருவன, பஜாஜ் ஆட்டோ (ரூ.2.14 லட்ச கோடி), மஹிந்திரா & மஹிந்திரா (ரூ.2.01 லட்ச கோடி) மற்றும் ஈச்சர் மோட்டார்ஸ் (ரூ.1.01 லட்ச கோடி) ஆகும். மாருதி சுஸுகியின் ஸ்டாக் விலை தற்சமயம் ரூ.10,050 ஆகவும், டாடா மோட்டார்ஸின் ஸ்டாக் விலை ரூ.896 ஆகவும் உள்ளது.