சர்வதேச அளவிலான பாதுகாப்பு பரிசோதனை… 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா நெக்ஸான்..!
இந்திய அளவில் அதிகம் விற்பனை ஆகக் கூடிய எஸ்யூவி கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் ஆகும். இந்தக் காரின் டிசைன், தொழில்நுட்பம் என பல அம்சங்களில் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, தற்போது சர்வதேச அளவிலான பாதுகாப்பு ஆய்வில் இந்தக் கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பாதுகாப்பு தர நிர்ணய விதிகளில் இந்தக் கார் தேர்ச்சி பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டிலும் இதேபோன்ற பாதுகாப்பு பரிசோதனை ஒன்று இந்தக் காருக்கு மேற்கொள்ளப்பட்டது. அந்த நிலையை ஒப்பிடுகையில் தற்போதைய சோதனையில் மிகக் கடுமையான நிபந்தனைகளை இந்த கார் பூர்த்தி செய்துள்ளது.
காரில் பயணம் செய்கின்ற பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் ஆகிய இரு தரப்பினரின் பாதுகாப்பும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் பாதுகாப்பு மிகுந்த கார்களின் பட்டியலில் டாடா நெக்ஸான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்திலும் டாடா நிறுவனத்தின் தயாரிப்பான சஃபாரி / ஹேரியர் கார் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன் பக்கத்தில் இருக்கும் பயணி மற்றும் ஓட்டுநர் இருக்கையில் இருப்பவரின் தலை, கழுத்து ஆகிய பகுதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அதேபோல முன்பக்கம் அமர்ந்திருப்பவர்களின் முழங்கால் பகுதிக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் இருந்து விபத்து ஏற்படும் பட்சத்தில் தலை, வயிறு, இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதி ஆகிய அனைத்திற்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. குறிப்பாக தலை மற்றும் இடுப்புப் பகுதிக்கு பாதுகாப்பு கிடைக்கின்ற வகையில் ஏர்பேக் செயல்படுகிறது.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் : சர்வதேச அளவிலான பாதுகாப்பு தர நிர்ணய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள இஎஸ்சி அம்சம் டாடா நெக்ஸான் காரில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு சீட்டிலும் சீட் பெல்ட் ரிமைண்டர் அம்சம் இடம்பெற்றிருக்கிறது. ஆக, அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பில் கவனம் எடுத்துக் கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கார் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்று முன்பக்கமும், பக்கவாட்டிலும் விபத்தை ஏற்படுத்தி பரிசோதனை செய்தபோது, சீட்டுகளில் பொருத்தப்பட்டிருந்த குழந்தை மாடல் பொம்மைகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. ஆக, டாடா நெக்ஸான் கார் என்பது அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பு கொண்ட காராக பார்க்கப்படுகிறது.
விற்பனையில் இரண்டாம் இடம் : 2024ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் அதிக அளவு விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் டாடா நெக்ஸான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 17,978 நெக்ஸான் கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவிகித வளர்ச்சியாகும். கூடிய விரைவில் நெக்ஸான் காரின் CNG வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.