டாடா பன்ச் இவி எலக்ட்ரிக் கார் இவ்வளவு அழகானதா!! வீடியோவை வெளியிட்டு ஆர்வத்தை தூண்டிய டாடா!
டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலக்ட்ரிக் கார் தொடர்பான புதிய டீசர் வீடியோ ஒன்று டாடா இவி யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சொல்ல வந்துள்ள விஷயம் என்ன என்பதை பற்றியும், இந்த புதிய டாடா எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காராக பன்ச் இவி-ஐ உலகளவில் ஜனவரி 7ஆம் தேதி வெளியீடு செய்ய உள்ளது. ஆனால், இதற்கு 2 நாட்கள் முன்பாகவே, அதாவது ஜன.5இல் பன்ச் இவி காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளன. விருப்பப்படுவோர் ரூ.21,000 என்ற டோக்கன் தொகையில் புதிய டாடா பன்ச் இவி-ஐ முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
இந்த நிலையில், பன்ச் இவி தொடர்பான புதிய டீசர் வீடியோ அபிஷியல் டாடா இவி யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களுக்காக தனியாக டாடா இவி என்ற பிராண்டை துவங்கி உள்ளது. டாடா இவி பெயரில் சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ஷோரூம்கள் துவங்கப்பட்டு உள்ளன.
முதல் இரு டாடா இவி ஷோரூம்கள் டெல்லி என்சிஆர் பகுதியில் மிக சமீபத்தில்தான் திறக்கப்பட்டன. இந்த நிலையில், பன்ச் இவி தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ வெறும் 10 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ளது. இருப்பினும், இந்த 10 வினாடிகளில், வெள்ளை நிறத்திலான புதிய டாடா பன்ச் இவி காரை மிக அருகாமையில் காண முடிகிறது.
இந்த டீசர் வீடியோவில் பன்ச் இவி காரை பற்றி பெரியதாக எந்த விஷயத்தையும் டாடா இவி நிறுவனம் தெரிவிக்கவில்லை. வீடியோவின் கடைசியில், கூகுள் பாக்ஸில் ‘புக் பன்ச்.இவி’ என பதிவிடப்பட்டுள்ளது போன்றதான படம் இடம் பெற்றுள்ளது. அதாவது, புதிய பன்ச் இவி எலக்ட்ரிக் காரை விரும்புவோர் இணையத்தளம் வாயிலாகவும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்பதை மறைமுகமாக டாடா நிறுவனம் கூறியுள்ளது.
டாடா பன்ச் இவி-ஐ பொறுத்தவரையில், வழக்கமான பன்ச் மைக்ரோ-எஸ்யூவி காரின் தோற்றத்தில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பெட்ரோல் பன்ச் காரில் இருந்து வேறுப்பட்டு தெரிய வேண்டும் என்பதற்காக பன்ச் இவி காரின் தோற்றத்தில் சில மாற்றங்களை டாடா நிறுவனம் செய்துள்ளது.
உதாரணத்திற்கு, பன்ச் இவி காரில் முன்பக்க கிரில் பகுதி முழுவதுமாக மூடப்பட்டு உள்ளது. வழக்கமான டாடா லோகோ வழங்கப்படும் இடத்தில் காரின் பேட்டரியை சார்ஜ் செய்யும் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படுவதை போன்று, புதிய பன்ச் இவி காரிலும் முன்பக்கத்தில் ஹெட்லைட்கள் இரண்டும் இணைக்கப்பட்டு உள்ளன.
பன்ச் இவி காரின் டாப் வேரியண்ட்களில் ஃபாக் விளக்குகளையும் கார்னரிங் ஃபங்க்ஷன் உடன் வாங்கலாம் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரு விதமான வேரியண்ட்களில் பன்ச் இவி விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் வேரியண்ட்டில் 25kWh பேட்டரி பேக்கும், லாங் ரேஞ்ச் வேரியண்ட்டில் 35kWh பேட்டரி பேக்கும் கிடைக்கும்.