சைரஸ் மிஸ்திரி குடும்பத்திற்கு மறுவாழ்வு கொடுக்கும் டாடா சன்ஸ் ஐபிஓ.. எப்படி தெரியுமா..?
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் IPO மூலம் 50000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை திரட்டுவது மட்டும் அல்லாமல் இந்த ஐபிஓவில் சுமார் ரூ.7-8 லட்சம் கோடி மதிப்பை இந்நிறுவனம் பெறும் என தகவல் வெளியானது.
இதேபோல் அமெரிக்க முதலீட்டு வங்கி நிறுவனமான ஸ்பார்க் பியூட்ரிம் வெளியிட்ட அறிக்கையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் மட்டும் முதலீடுகளின் சந்தை மதிப்பு ரூ.16 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் டாடா டெக்னாலஜிஸ், டாடா மெட்டாலிக்ஸ் மற்றும் ராலிஸ் போன்ற பட்டியலிடப்படாத முதலீடுகள் மற்றும் துணை நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் வாயிலாக கூடுதலாக ரூ.1-1.5 லட்சம் கோடி மதிப்பை டாடா சன்ஸ் பெற முடியும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட 17 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு மதிப்பை கொண்ட டாடா சன்ஸ் 50-60 சதவீத தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டால் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிடும். சரி இதற்கும் கார் விபத்தில் மறைந்த சைர்ஸ் மிஸ்திரி-க்கும் என்ன தொடர்பு..?
டாடா குழுமத்தில் இயங்கி வரும் அனைத்து நிறுவனம், முதலீடுகள், வர்த்தகம் என அனைத்திற்கும் தலையாய உரிமை கொண்டாடுவது டாடா சன்ஸ். டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் டாடா குழுமத்தின் அனைத்து வர்த்தகமும் வருகிறது, இந்த நிறுவனம் இதுநாள் வரையில் ஒரு தனியார் முதலீட்டு மற்றும் நிர்வாகமாக இயங்கி வந்தது.
இந்த நிலையில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளை டாடா குடும்பத்தின் உறுப்பினர்கள் இருக்கும் டாடா ட்ரஸ்ட்ஸ் (Tata Trusts) வைத்திருக்கும் வேளையிஸ், எஸ்பி குழுமத்தின் உரிமையாளரான மிஸ்திரி குடும்பம் 18.5 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
மறைந்த சைர்ஸ் மிஸ்திரி-யின் எஸ்பி குழுமம் தற்போது கடுமையான கடன் சுமையில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் டாடா சன்ஸ் பங்குகளை விற்க அனுமதி கோரி வழக்கு தொடுத்த நிலையில், டாடா குழுமம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் பணப்புழக்க பிரச்சனையை எதிர்கொள்ளும் மிஸ்திரி குடும்பத்திற்கு, டாடா சன்ஸ் ஐபிஓ-வில் அதிகப்படியான பங்குகளை விற்கும் வாய்ப்பை வழங்கும்.
டாடா சன்ஸின் துணை நிறுவனமான டாடா கேப்பிட்டல், ரிசர்வ் வங்கியால் அப்பர் லேயர் NBFC என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுத்தப்பட வேண்டும்.
டாடா கேப்பிட்டலில் தற்போது 94 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு, இந்த பட்டியலிடுதல் மூலம் பணப்புழக்கம் கிடைக்கும்.