ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிசிஎஸ் நிறுவனம்…என்ன காரணம்..?

ஊழியர்கள் மார்ச் மாத இறுதிக்குள் அலுவலகத்திற்கு வந்தாக வேண்டும் என்று டிசிஎஸ் நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான விதிமுறைகளை எப்போதுமே கடுமையுடன் பின்பற்றி வரக் கூடிய நிறுவனம் டிசிஎஸ் என்று அறியப்படும் நிலையில், மீண்டும் அதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தையொட்டி, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணி செய்கின்ற புதிய கலாச்சாரத்திற்கு மாறத் தொடங்கினர். பின்னர் கொரோனா காலம் முடிவுக்கு வந்தபோது பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் ஹைபிரிட் பணி முறையை கடைப்பிடிக்க தொடங்கினர்.

அதாவது வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும் என்றும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தபடியே பணி செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால், டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு இதுபோன்ற சலுகை எதையும் கொடுக்க விரும்பவில்லை.

பணியிடத்திற்கு நேரடியாக வந்து ஊழியர்கள் பணி செய்கின்றபோதுதான் பணித்திறன் அதிகரிக்கும் என்று டிசிஎஸ் நிறுவனம் கருதுகின்றது. இதனால் ஊழியர்கள் எப்போதும் போல அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை டிசிஎஸ் நிறுவனம் கடுமையாகப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிசிஎஸ் இறுதி எச்சரிக்கை :

ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப மேலும் ஒரு காலாண்டு காலம் இறுதியாக கொடுக்கப்படுகின்றது. அந்த காலாண்டு காலம் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறும். ஆனால், காலக்கெடு இறுதியானது. இதற்கு மேலும் அலுவலகத்திற்கு வராத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்க அதிகாரி என்.ஜி.சுப்பிரமணியன் சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணிக் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் குறித்தும், இந்த முடிவை எடுப்பதன் பின்னணியில் நிறுவனத்தின் பக்கம் இருக்கின்ற நியாயம் குறித்தும் சுப்பிரமணியன் எடுத்துக் கூறி பேசியதாகக் கூறப்படுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களில் ஹைபிரிட் பணி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்றாலும், அதை டிசிஎஸ் நிறுவனம் விரும்பவில்லை. ஊழியர்கள் இடையே நேரிடையான கலந்துரையாடல் இருந்தால்தான் பணித்திறன் அதிகரிக்கும் என்றும், நிறுவனத்திற்கான வளர்ச்சி இருக்கும் என்றும் டிசிஎஸ் நிறுவனம் கருதுகிறது.

ஊழியர்கள் நீண்ட நாட்களாக வீட்டில் இருந்தே பணி செய்து வரும் நிலையில், அவர்களிடையே கலந்துரையாடல் எதுவும் இல்லை என்பது குறித்தும், அதனால் நிறுவனத்திற்கு எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் டிசிஎஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்திருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக, ஹைபிரிட் பணி நடைமுறையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் முடிவுக்கு கொண்டு வந்தது. வீட்டில் இருந்தே பணி செய்கிறோம் என்ற பெயரில் ஊழியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணி செய்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், இதுபோன்ற நடவடிக்கையை டிசிஎஸ் நிறுவனம் முன்னெடுக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *