ஜூலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செல்லும் டீம் இந்தியா – 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு!
நடப்பு ஆண்டில் இந்திய அணி அடுத்தடுத்து பிஸியாகவே விளையாடி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. கடைசி போட்டி 2 முறை சூப்பர் ஓவருக்கு சென்றது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து தொடரை முடித்த கையோடு ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறது. அதன் பிறகு வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்த தொடர் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து ஜூலை மாதம் இந்திய அணியானது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
இதற்கான அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்த 5 போட்டிகளும் ஹராரே மைதானத்திலேயே நடத்தப்படுகிறது. இந்த சுற்றுப்பயணமானது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அதிக வாய்ப்புகளை வழங்குவது குறித்து இரு வாரியங்களுக்கு இடையே நடந்த விவாதங்களுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருப்பதாவது: கிரிக்கெட்டிற்கு பங்களிப்பதில் பிசிசிஐ எப்போதும் முன்னோடியாக திகழ்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு எங்களது ஆதரவு தேவை. சக உறுப்பினர் வாரியங்களை ஆதரிப்பதில் எங்களது அர்ப்பணிப்பு மற்றும் கிரிக்கெட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான எங்களது கொள்கையுடன் ஒத்துப் போகிறது. மேலும், இருதரப்பு நாட்டு கிரிக்கெட்டை வலுவாகவும், வணிக ரீதியாக சாத்தியமானதாக மாற்ற பிசிசிஐ எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
இதே போன்று ஜிம்பாப்வே கிரிக்கெட் தலைவர் தவெங்வா முகுஹ்லானி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். ஜூலை மாதம் இந்தியா உடனான டி20 தொடரை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களது நாட்டின் சர்வதேச ஈர்ப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியா – ஜிம்பாப்வே டி20 தொடர்:
ஜூலை 6, 2024 – இந்தியா – ஜிம்பாப்வே முதல் டி20 – ஹராரே
ஜூலை 7, 2024 – இந்தியா – ஜிம்பாப்வே 2ஆவது டி20 – ஹராரே
ஜூலை 10, 2024 – இந்தியா – ஜிம்பாப்வே 3ஆவது டி20 – ஹராரே
ஜூலை 13, 2024 – இந்தியா – ஜிம்பாப்வே 4ஆவது டி20 – ஹராரே
ஜூலை 14, 2024 – இந்தியா – ஜிம்பாப்வே 5ஆவது டி20 – ஹராரே