வெப்பநிலை இயல்பைவிட மேலும் அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை
தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.26 27ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.