கர்நாடகாவில் பயங்கரம்..! துண்டு துண்டாக வெட்டப்பட்ட 70 வயது மூதாட்டி..!
கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுசிலம்மா (70). பாஜக பிரமுகரான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் தனியாக வசித்து வந்தார். அவரது மகளும் அதே குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆனால் பிள்ளைகளுடன் பெரிதும் உறவில் இல்லாதபடி தனியாகவே இருந்து வந்துள்ளார்.
சுசிலம்மா அவ்வப்போது கட்சி நிகழ்வுகளுக்காக வெளியூர் சென்று விடுவார். மற்ற நேரங்களில் தன்னுடைய சொத்துக்களை விற்பனை செய்வது, அடமானம் வைப்பது என வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கட்சி பணிக்காக வெளியே சென்ற சுசிலம்மா 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மகள் தாய் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே சுசிலம்மா வீட்டின் அருகே இருந்த ஒரு பிலாஸ்டிக் டிரம்மிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், டிரம்மை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், டிரம்மில் 6 துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இருந்துள்ளது. பின்னர் அது சுசிலம்மாவின் உடல் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மோப்ப நாய் அருகில் இருந்த தினேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளது. இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பவத்தன்று சுசிலம்மா வீட்டிற்கு சென்ற தினேஷ், அவரை தாக்கி கொலை செய்துவிட்டு உடலை 6 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீச திட்டமிட்டுள்ளார்.
ஆனால் சுசிலம்மாவின் வீட்டை சுற்றி ஆட்கள் இருந்ததால், வெகு நேரம் வீட்டிற்குள் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த தினேஷ், உடலை வீட்டின் அருகே இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் மறைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தினேஷுக்கு ஏற்கனவே கடன் தொல்லை இருந்த நிலையில், பணத்திற்காக கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.