ரஷ்யாவில் ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதல்… பிரதமர் மோடி கடும் கண்டனம்!
ரஷ்யாவின் மாஸ்கோவில் இசைக் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர் மற்றும் 145க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஐந்து குழந்தைகள் உட்பட 115 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆயுதமேந்திய தனிநபர்கள் குழு குரோகஸ் சிட்டி ஹால் கச்சேரி அரங்கிற்குள் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதும், குண்டுகள் வீசியும் தாக்க தொடங்கினர். ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான அமாக் டெலிகிராமில் வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையின் மூலம், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் கூறியது.
அடைக்கலம் தேடி, இருக்கைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்ட மக்கள்
தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோவில் குரோகஸ் நகர மண்டபம் தீப்பிடித்து எரிவதையும், வானத்தில் புகை எழுவதையும் காணலாம். பரந்த இசை அரங்கில் துப்பாக்கிச் சூடு வெடித்ததால் பீதியடைந்த மக்கள் அடைக்கலம் தேடி, இருக்கைகளுக்குப் பின்னால் மறைந்திருப்பதையும் இந்த காட்சிகளில் காணலாம். ஆயுதம் ஏந்திய நபர்கள் “தானியங்கி ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்” மற்றும் “ஒரு கையெறி குண்டு அல்லது வெடிகுண்டை வீசினர், அதன் மூலம் தீ பரவியது” என்று ரஷ்யாவின் செய்தி நிறுவனங்கள் அறிவித்தது. பின்னர் அவர்கள் “ஒரு வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது” என்று செய்தி நிறுவனம் கூறியது.
பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
மாஸ்கோவில் மக்கள் கூடியுருந்த கச்சேரி அரங்குக்குள் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), இது ஒரு ‘கொடூரமான செயல்’ என்றும், ரஷ்ய அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இந்தியா தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துவதாகக் கூறினார். “மாஸ்கோவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த துயரத்தின் போது ரஷ்ய கூட்டமைப்பு அரசு மற்றும் மக்களுடன் இந்தியா தோள் கொடுத்து நிற்கிறது” என்று பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாகவே எச்சரித்த அமெரிக்க உளவுத்துறை
ஐஎஸ்ஐஎஸ் தான் தாக்குதல் நடத்தியுள்ளது என அமெரிக்க அதிகாரிகளும் கூறியுள்ளனர். பயங்கரவாத அமைப்பான ISIS தாக்குதல் நடத்தக் கூடும் என அமெரிக்க உளவுத்துறை ரஷ்ய அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்-கே என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு-கொராசன் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மார்ச் மாதம் அமெரிக்க உளவுத்துறையை எச்சரித்தது. ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் ரஷ்யாவில் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.